வியாழன், 30 ஆகஸ்ட், 2018

மறக்கப்பட்ட இந்திய டிராகுலா

                   ஆடம்பரம் ...இன்றைய கால கட்டத்தில்  எந்தப் பக்கம் திரும்பினாலும் நம் முன்னாடி வந்து நிற்க்கிறது இந்த ஆடம்பரம்...வீண் பகட்டு.... எல்லாவற்றிலும் ஆடம்பரம். இந்த பகட்டு வாழ்விற்க்கு  நாம் கொடுக்கும்  விலை நம் நிம்மதி என்பதை  நாம் உணருவதில்லை.  சில சமயங்களில்  நம்ம உயிரையும் விலையா  குடுக்க வேண்டிய நிலை வரத்தான் செய்கிறது. ஆனா  இதை உணர்பவர்கள் மிகச் சிலரே. இந்த ஆடம்பரம் என்பது இன்று நேற்று  வந்தது இல்லை.  காலம் காலமாக  மனித சமூகத்தைப் பிடித்திருக்கிற தீரா நோய்.

               அந்தக் காலத்தில் ஆடம்பர பிரியர்களாக இருந்த மன்னர்களின்  எண்ணிக்கை மிக மிக அதிகம்.  மன்னர்கள் என்றாலே ஆடம்பரம் தானே. அவர்கள் வளர்த்து விட்ட ஜமீந்தார்கள், நிலக்கிழார்கள் மற்றும் பெரும் செல்வந்தர்களும் தங்கள் வாழ்க்கையில் ஆடம்பரப் பிரியர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.
           இந்திய வரலாற்றில், சுதந்திரத்திற்க்கு முந்தைய  இந்தியாவின்  ஆல்வார் தேசத்து ராஜா ஜெய்சிங். இவர் ஆடம்பரப் பிரியர் மட்டுமல்ல அலங்காரமாகப் பேசுவதிலும்வல்லவர். பெரிய பக்திமான் போல்  ஆன்மிகமும் பேசுவார். சரியான முன்கோபி. ஆங்கில அரசை தன் கைக்குள் வைத்துக்  கொண்டு அவர்களுக்குத் தேவையான  எல்லாவற்றையும் செய்து தந்ததால், இவரின் மீது  எழுந்த குற்றச்சாட்டுக்களை ஆங்கில அரசு கண்டு கொள்ளவேயில்லை.
           இவர் புலி வேட்டைக்குச் செல்லும் போது உடன் செல்வதற்க்கென்றே ஐந்தாயிரம்  பேர்  தயாராக இருப்பர். இவர் வேட்டைக்குச் செல்வது ஒரு திருவிழா போல் நடந்திருக்கிறது.  நாற்பது யானைகளோடு வழி நெடுக மக்கள் கட்டாய வரவேற்பு தரவேண்டும் இவர்க்கு.   தங்கச் செருப்பு அணிந்து தான் வேட்டைக்குச் செல்வார். யானை,  இவர்க்கு மிகவும் பிடித்தமான விலங்கு.  யானைகளுக்கு வரக் கூடிய நோய்களுக்கான  சிகிச்சைகள்  குறித்தும் இவர் நன்கு அறிந்தவர்.
              நூற்றியைந்து  அறைகள் கொண்ட பிரம்மாண்டமான  மாளிகை ஒன்றை இவர் விஜயசாகரம் ஏரியில் கட்டினார். இவர்க்கு  உடைகளின் மீது அலாதி விருப்பம் உண்டு. சரிகை வேலைப்பாடுகள் நிறைந்த உடைகளையே பயன்படுத்துவார்.  இவரிடம் நாலாயிரம் கோட் சூட்டுகள், இரண்டாயிரம் கைத்தடிகள், ஆயிரத்து முந்நூறு ஜோடி செருப்புகள் இருந்திருக்கின்றன.
இவ்வளவு ஆடம்பரமாக வாழ்ந்த இவரின் குணங்கள் மக்களை அதிர வைக்கும்படியாகவே இருந்திருக்கிறது. மக்களை துன்புறுத்தி இன்பம் காண்பதில் இவருக்கு நிகர் இவர் தான். அளவுக்கு அதிகமான  குரூரவெறி படைத்த சேடிஸ்ட் .
       புலிக்கூண்டிற்க்குள் சிறுவர்களை எறிந்து  புலி துரத்துவதையும் சிறுவர்களின் அலறலையும் ரசித்தவர். நுகத்தடியில் பெண்களைப் பூட்டி, ஏர் உழச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.  முதுகுத்தோல் உரிப்பது, விளையாட்டு மைதானத்தில் பந்துகளை எடுத்துப் போட பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்தல் ,அண்ணன் தங்கையை கட்டாய பாலுறவு கொள்ளச் செய்வது என்று இவருடைய வக்கிர உணர்வுகள் விசித்திரமானவை.
ஒரு பக்கம் சேடிஸ்ட்டாக இருந்துகொண்டு மறுபக்கம் சமய நூலகளை ஆழ்ந்து படித்து, அது பற்றி சிறப்பாக பேசக்கூடியவர் என்பது ஒரு பெரிய முரண். தன்னை கடவுள் என்று கூறிக்கொண்டு ஆன்மீகச் சொற்பொழிவுகளும் ஆற்றுவார். பகவத் கீதைபற்றி இவர் ஆற்றும் உரை  கேட்டு ஆங்கில அதிகாரிகள் வியந்து பாராட்டி இருக்கின்றார்கள். தான் இந்த உலகை உய்விக்க வந்த அவதாரம் என்றும், முற்பிறவியில் தான் ஞானியாக இருந்ததாலயே இப்பிறவியில் மன்னனாகப்  பிறந்ததாக தன்னைப் பற்றி பெருமை பேசும்                             இவர், தன்னை ராஜரிஷி என்று அழைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். குழந்தைகளை பலி கொடுக்கவும் தயங்காத இவருக்கு ஏனோ பசுவின் மீது மட்டும் கருணை இருந்திருக்கிறது. பசுந்தோலால் செய்யப்பட்ட எந்த ஒரு பொருளையும் இவர் பயன்படுத்தியதில்லை.மான் தோலால் செய்யப்பட்ட பொருள்களையே பயன்படுத்தி வந்திருக்கிறார். இதனால் இவரை விருந்துக்கு அழைக்கும் வெள்ளைக்காரர்கள்  தங்கள் வீடுகளில் இருக்கும் இருக்கைகளின் தோல் உறைகளை மாற்றிவிடுவது உண்டு.
             ஆங்கிலேய அதிகாரிகளை தன் கைக்குள் வைத்துக் கொள்ள எது வேண்டுமென்றாலும், செய்து தந்த இவர், லண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டுக்கு  பங்கேற்கச் சென்ற பொழுது பக்கிங்காம் அரண்மனைக்கு விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். அப்போது மன்னராக இருந்த  ஐந்தாம் ஜார்ஜ் மன்னரோடு கையுறையோடேயே கை குலுக்கப் போவதாகத் தெரிவித்தார். மன்னர் மிலேச்சன் என்றும் அவரைத் தொட்டால் தனக்கு தீட்டு என்றும் காரணம் கூறியுள்ளார். மன்னரை சந்திக்கத் தாமதமாகச் சென்ற இவர், வயிற்றுப் போக்கு ஏற்பட்டுவிட்டதாகப் பொய் சொல்லி கையுறையோடேயே கை குலுக்கியுள்ளார். அரசியோடு கை குலுக்கும் போது கூட, மெல்லிய காகிதம் போன்ற உறையோடே கை குலுக்கியுள்ளார்.
        ஒரு முறை வைசிராயின் மனைவி ,விருந்தில் இவர் அணிந்திருந்த மோதிரத்தின் மீது ஆசை கொண்டார். அணிந்து பார்க்கச் சொல்லி குடுத்த ஜெய்சிங் , வெள்ளைக்காரப் பெண் அணிந்ததால் தீட்டு ஆகிவிட்டது என்று கூறி ,அதனை தண்ணீரில் போட்டு பட்டுத்துணியால் துடைத்து அவரை அவமானப்படுத்தியுள்ளார். பிரிட்டிஷ் அதிகாரிகளின் மனைவிகளை தனியாக விருந்துக்கு அழைத்து அவர்களை தன் காதல் வலையில் விழ வைப்பதும் இவருக்கு கை வந்த கலையாகும்.அதற்க்கென்றே தனியாக வைர மோதிரங்கள் மற்றும் நகைகளை பயன்படுத்தியுள்ளார்.

தன்னை எதிர்ப்பவர்களையும் மதிக்காதவர்களையும் இவர் பழி வாங்கும் விதமே வித்தியாசமானது. இவர் ரோல்ஸ்ராய் காரை விலைக்கு வாங்க விரும்பிய போது அந்தக் கம்பெனி, உங்களால் வாங்க முடியாது என்று ஏளனமாகக் கூறியதால்,ஐந்து வண்டிகளை வாங்கி தன் வீட்டில் வைக்கோல் ஏற்றிப் போக பயன்படுத்தினார்.
              ஒரு முறை பிக்கானீர் மன்னர் இவரை அவமானப்படுத்தும் எண்ணத்தில் இவரை தவிர்த்து மற்ற எல்லா மன்னர்களையும் விருந்துக்கு அழைத்தார். ஆத்திர்ம் அடைந்த ஜெய்சிங் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே நாற்பது மைல் சுற்று வட்டாரத்தில் இருந்து அனைத்து பொருட்களையும் வாங்கி விட்டார். இதனால்பெரிய நெருக்கடி ஏற்பட, அத்தனை மன்னர்களுக்கும் தானே ஒரு பெரிய விருந்து கொடுத்து தன் பெருமையை நிலைநாட்டியுள்ளார்.
              இங்கு மட்டுமல்ல,வெளிநாடுகளிலும் கூட அவர் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார். ஒருமுறை லண்டனில் உள்ள ஒரு புகழ்பெற்ற டெய்லரிடம் தனக்கு ஒரு ஜோடி கோட்சூட் தைத்து தருமாறு கூற, டெய்லரும் பத்து நாள்  ஆகும் என்று கூறிவிட்டார். வேறு வழியின்றி காத்திருந்து தைத்து வாங்கிக் கொண்டு நாடு திரும்பிய ஜெய்சிங், தனது கோட்  பொத்தானை தானே பிய்த்து  எறிந்துவிட்டு,அதை தைத்து தருவதற்க்காக அந்த டெய்லருக்கு தந்தி அடித்து வரவழைத்தார். போக்குவரத்து செலவு,தங்கும் இடம்,பொத்தானை சரி செய்யும் கூலி  அத்தனையும் தருவதாகக் கூறியதால் டெயல்ரும் சம்மதித்து இந்தியா வந்தார். கிட்டத்தட்ட மூன்று மாதங்களூக்கு அவரை  இழுத்து அடித்து, பொத்தானை தைத்து வாங்கி. முடிவில் உரிய சன்மானம் குடுத்து அவரை அனுப்பி வைத்தார்.
தனது பகட்டான வாழ்க்கைக்காக மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றிக்கொண்டேயிருந்தார்.   தனது சமையல்காரர்களை பாரீஸுக்கு  அனுப்பி புதுவகை உணவுகளை சமைப்பது குறித்து அறிந்துவரச் செய்தார். தன்னைப் போலவே உடை அணிந்த இருபது பேரை அழைத்துக் கொண்டு விருந்துக்கு செல்வதை  வழக்கமாகக் கொண்டிருந்த இவர் சமயங்களில் அவர்களை சாட்டையால் அடித்து விரட்டி,  சிரித்தும் மகிழ்வார்.இவரது அட்டகாசங்களால் மிகவும் துன்பப்பட்டனர் நாட்டு மக்கள்.
    ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையிழந்த பிரிட்டிஷ் அரசு  இவரை நாடு கடத்தியது  .இருபது பணியாளர்களுடன் பாரீசில்  வாழ்ந்துவந்த இவர் மதுவுக்கு அடிமையாகி உயிரிழந்தார்.  இவரது உடல் தங்கத் தகடு வேய்ந்த காரில் கொண்டு செல்லப்பட்டது. அப்பொழுது கூட கண்களுக்கு கூலிங்கிளாஸ் ,கைகளுக்கு கையுறையும் போடப்பட்டு இருந்தது.
               இவரைப் போன்ற மன்னர்களின் நெறியற்ற வாழ்வால் நாட்டு மக்கள் அடைந்த துன்பங்களும் நெருக்கடிகளும் இடர்களும் அளவிடமுடியாத அளவில் இருந்தது உண்மை. வீண் பகட்டிலும் டாம்பீகத்திலும் வாழ்க்கையை தொலைத்த இவரைப் போன்ற மன்னர்கள் இன்று வரலாற்றில் இடம் தெரியாது போய்விட்டனர். ஆனால் இவர்களது முட்டாள்தனங்கள் இன்று வரை அரசியல்வாதிகள் மூலமாகக் தொடர்ந்து வருவது மன்னர் ஆட்சியின் மிச்சங்கள் இன்னும் அழிக்கப்படாமல் இருப்பதையே காட்டுகிறது.இவரைப் போன்றவர்களின் வாழ்வு நமக்கு வாழ்வு குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்க்குறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புது வருடம்...புது வசந்தம்...புது சபதங்கள்.

                புது வருசம்னாலே  நிறைய தீர்மானங்கள் எடுத்துக்கனும்ங்ற சம்பிரதாயத்த யாரு உருவாக்குனதுனு தெரில..வருசாவருசம் புதுப்புது தீர்மா...