திங்கள், 31 டிசம்பர், 2018

புது வருடம்...புது வசந்தம்...புது சபதங்கள்.

                புது வருசம்னாலே  நிறைய தீர்மானங்கள் எடுத்துக்கனும்ங்ற சம்பிரதாயத்த யாரு உருவாக்குனதுனு தெரில..வருசாவருசம் புதுப்புது தீர்மானங்கள்  எடுக்குறதுல கில்லி நாம . புது வருசம் நெருங்குதுன்னாலே நம்ம   மனசு நமநமக்க ஆரமிச்சுரும்.. இந்த வருசம் என்னன்ன தீர்மானங்கள் எடுத்துக்கலாம்னு மண்டைய உடைச்சுகிட்டு, பட்டியல் போட தொடங்கிருவோம் .

                       காலைல சீக்கிரம் எந்திரிக்கனும் ..ஜிம்முக்கு போகணும். சிக்ஸ் பேக் வைக்கனும்.. தம் அடிக்குறத விடணும். அரைமணிநேரம் நடக்கணும். கோவத்த கொறைக்கணும்... வருமானத்த அதிகரிக்கணும்..பைக் வாங்கணும். உணவை வேஸ்ட் பண்ணக்கூடாது...இந்த வருசமாது கண்டிப்பா  உடம்ப செக் பண்ணனும். அது வாங்கணும் இது வாங்கணும் அந்த நாட்டுக்கு போகணும் இந்த நாட்டுக்கு போகணும். அப்பப்பா....அப்பிடி இப்பிடினு.. எவ்வளவோ திட்டங்கள்..

                      முடிவு எடுக்குறதுலாம் சரியா செய்வோம்..ஆனா அது படி   நடக்குறோமாங்குறதான் இங்க கேள்வியே..அதிகபட்சம் மூணு மாசம் செய்வோம்..அப்புறம் பழைய குருடி கதவத் திறடிங்குற மாரி பழைய மாதிரி மாறிருவோம்.. நம்ம மனசோட சோம்பேறித்தனம்  தான் எல்லாத்துக்கும் காரணம். ஒரு வேலை செய்ய நெனச்சோம்னா ,நம்மள நாளைக்கு செய்யலாம், அப்புறம் செய்யலாம்னு தள்ளிப் போட வைக்கும் . கொஞ்சம் மனசு சொல்றத கேட்டுட்டா போதும் சோலி முடிஞ்சிரும்..இந்த மாதிரி நேரங்கள்ல நம்ம எதுனால இந்த தீர்மானங்கள எடுத்தோம்னு கொஞ்சம் யோசிச்சோம்னா மனச ஜெயிச்சிரலாம்.

               இந்த வருசம் முழுசும் நான் இத செய்வேன்னு பெரிய இலக்கா வச்சுக்காம,இந்த வாரம்,இந்த மாசம் ,இல்ல இத்தன நாள் நான் இத செய்வேன்னு சின்னச் சின்ன இலக்குகளா வச்சுக்கிட்டா நம்ம மனசுக்கு அது பெரிய விசயமா தெரியாது.நம்மகூட ஒத்துழைக்கும்.

              சின்னச் சின்ன இலக்குகள செஞ்சு முடிக்குறப்ப நமக்கு கெடைக்குற சந்தோசமும் உற்சாகமும் நம்மள சும்மா விடாது..இன்னும் வேணும்  இன்னும் வேணும்னு நம்மள ஓடஓட விரட்டும். நம்ம வெற்றி தான் நம்மளோட மிகப் பெரிய உந்துசக்தி..வெற்றி தர்ற போதைக்கு இணை இந்த உலகத்துல எதுவும் இல்ல..
       
                நம்மளோட புது வருச தீர்மானங்களையும் இதே மாதிரி சின்னச் சின்ன இலக்குகளா பிரிச்சு வச்சு வேலை பாத்தா நம்மளாலயும் கண்டிப்பா வாழ்க்கைல உயர்ந்த இடத்துக்கு வரமுடியும். இந்த புது வருசத்துல 365 நாள்கள் நமக்கு இருக்கு. டெய்லி ஒரு அடி...டெய்லி ஒரு சின்ன முயற்சி செஞ்சாப் போதும். வருச முடிவுல திரும்பிப் பாத்தா ... சேர வேண்டிய இடத்த அடைஞ்சிருப்போம்..இல்லனா, அதுக்கு பக்கத்துலயாவது வந்துருப்போம்.
அவசரத்துல தீர்மானங்கள எடுத்துட்டு அவகாசம் கெடைச்சதும் முயற்சிகள  கைவிடுற தோல்வியாளர்களா  இருந்தது போதும். நாம் எடுக்குற முடிவுகள நாமளே கை விட்டுட்டா..நம்மள நாமளே மதிக்குறதில்லங்குறத தான் இது காட்டுது. இது நம்ம சுய மரியாதைய குறைக்குதுங்குறத நாம உணர்றதே இல்ல.

              அதுனால நம்மளோட தீர்மானங்கள சின்னச் சின்னதா பிரிச்சு வச்சு நம்ம வேலைகள தொடர்ச்சியா செய்வோம்..வர்ற புது வருசம் நம்மளுக்கு  எல்லா வளத்தையும் சந்தோசத்தையும் குடுக்கும். வெற்றி நமதே...
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்...

சனி, 29 டிசம்பர், 2018

புதுசு கண்ணா புதுசு..

புதுசு கண்ணா புதுசு.....


விட்டா போதும்டா சாமினு தலை தெறிக்க, ஓட்டமா ஓடி டெட்லைன்ன தொட்டுருச்சு 2018.  இன்னும் ரெண்டு நாள் தான்.  வாசக் கதவத் தட்டிக்கிட்டே இருக்குற  2019  குத்தாட்டம் போட்டு வந்து உக்காந்துக்கும். புது வருசத்தன்னைக்கு சீக்கிரமே எந்திருச்சு, குளிச்சு, புது ட்ரெஸ் போட்டுக்கிட்டு கோயிலுக்குப்  போலாம்  வா... வா...னு  நம்ம கையப் பிடிச்சு இழுத்துட்டுப் போக ஒரு கூட்டம் தயாரா இருக்கும்.

             அன்னைக்கு, அத பண்ணிரணும்.... இதப் பண்ணிரணும் .... இனிமே இத பண்ணவே கூடாதுனு  ஒரு பெரிய பட்டியல கைல வச்சுக்கிட்டு இன்னொரு கூட்டம் ரெடியா  இருக்கும்.

                    இது எதுவுமே வேண்டாம்டா ....டிவில உலகத் தமிழர்களுக்காகப்  போடுற புத்தம் புது திரைப்படத்த நிம்மதியா , வீட்டுல உக்காந்துகிட்டு,கால் ஆட்டீக்கிட்டே, வச்சக் கண்ண எடுக்காம பாத்தே பொழுத ஓட்டுற கூட்டம் ஒரு பக்கம் டிவிகுள்ள  தொலைஞ்சு போக காத்துகிட்டு  இருக்கும்.

                  இது எதுக்குமே தொடர்பில்லாம ,அன்னைக்கு உழைச்சா தான்  சாப்பாடுனு ,வழக்கம் போல வாழக்கையோட ஓட்டத்துல ஓடிகிட்டு இருக்குற ஒரு கூட்டம் .  இப்பிடி  ஒவ்வொரு மனுசனும், ஒவ்வொரு விதத்தில இருந்தாலும்... புதுசுனா எல்லார் மனசுலயும் மத்தாப்பு வெடிக்கத் தான் செய்யுது.

                 புதுப் பொருள் எதுவானாலும் ஒரு நிமிடம் நம்ம மனசு மயங்கித்தான்  போகுது. புதுசு தர்ற போதைக்கு இணையா எதுவும் இல்ல. புது சட்டை, புது சேலை , புது செருப்பு, புது கம்மல், புது வண்டி, புது ஷூ , புது ஃபோன் , புது நட்பு.... இப்பிடி சொல்லிகிட்டே போலாம்.  பட்டியல் இமயமலை வரைக்கும் நீளும் புதுசு வந்ததும்  அட்டை மாதிரி நம்ம கூடவே ஒட்டிக்கிட்டு  இருந்த சலிப்பெல்லாம் ஓரமா ஒதுங்கி, அடையாளம்  தெரியாமா சின்னாபின்னாமாகிப் போயிரும்.  சின்னச் சின்ன சந்தோசங்கள்.. நம்ம வாழ்க்கைய கொண்டாட்டமாக்கிருது. இந்த புதுவருச கொண்டாட்டங்களும் அந்த பட்டியல்ல  களத்துல பட்டய கெளப்பிக்கிட்டு இருக்கு ஒவ்வொரு வருசமும்

               சமீப காலமா எல்லாராலயும் பெரிய எதிர்பார்ப்போடு, சாதி மத வேறுபாடு எதுவுமில்லாம , எல்லா மக்களுமே கொண்டாடுற இந்த ஆங்கில புத்தாண்டு மக்கள் மனசுல ஒரு பெரிய நம்பிக்கைய தருது.

            புது வருசத்துல சாதிச்சுருவோம்ங்க்ற நம்பிக்க தர்ற உத்வேகம் நம்ம உடம்புல புது ரத்தம் ஓடுற மாரி  இருக்கும். எதடா வெட்டுவோம் ,எதடா குத்துவோம்னு க்கேறின நரம்புகள் நம்மள தோள்பட்டையத் தூக்கிக்கிட்டு நடக்கச் சொல்லும்.  நாமளும் ஒரு நாலு நாளைக்கு நான் தான் ராஜாங்கற மாதிரி நெஞ்ச நிமித்திக்கிட்டு நடப்போம்..

அந்த திமிர்... அந்த கெத்து.... அந்த கான்பிடென்ஸ்...வேற லெவல்...

கொண்டாடுவோம்....ஆனந்தமா....மகிழ்ச்சியா... சந்தோசமா..

வாழ்க்கைய கொண்டாடி களிப்போம்...

புத்தாண்டு வாழ்த்துகள்....

புதன், 19 டிசம்பர், 2018

நீர்

              இந்த உலகத்துல உசுரோட இருக்கனும்னா அதுக்கு இந்த நீர்தான்  ரொம்பத் தேவை.. அணுக்களின் சேர்மம் நீர்னு அறிவியல் சொல்லுது. H2Oதான் இந்த  நீரோட மூலக்கூறு. நீர் திட,திரவ ,வாயு வடிவத்துல இருக்கு .
 
      மனுசனுக்கு மட்டுமில்ல இந்த உலகத்துல இருக்குற அத்தன ஜீவராசிக்கும் தண்ணீர் ரொம்பத் தேவை. நீரின்று அமையாது உலகுனு   வள்ளுவர் சொல்லிருக்காரு. மனுசனோட உடம்புல நீர்  70% இருக்கு. இயற்கை நமக்கு குடுத்த கொடைதான் இந்த நீர். ஒரு மனுசன் எவ்ளோ கோவத்துல இருந்தாலும், முகத்துல நல்லா  சள் சள்னு தண்ணிய அடிச்சா இல்ல  ஒரு சின்ன குளியல் போட்டாலோ நம்ம கவலைகளோ இல்ல, உடல் அயர்ச்சியோ இருந்த இடம் தெரியாம ஓடிப்போயிரும். மந்திரம் போட்டது மாரி நம்ம உடம்பு  நல்லா என்ர்ஜடிகா ஆகிரும். மனசும்  லேசாகிரும். நம்ம மனசு சுறுசுறுப்பா இருக்குறப்ப நம்மளால பெரிய பெரிய விசயங்களையெல்லாம் அசால்டா சாதிக்க முடியும். சோ  எப்பலாம் டய்ர்டா  ஃபீல் பண்றோமோ அப்பலாம்  தண்ணிக்குள்ள நம்ம முகத்தையோ இல்ல உடலையோ கொஞ்சம்  காட்டுனா  போதும். சூரியனைக் கண்ட பனித்துளி போல களைப்பு ஓடியே போயிரும்.

                        உலகமே நீராலதான் இயங்கிக்கிட்டு இருக்குன்னு சொல்லலாம். உலகத்துல இருக்குற நிலப்பரப்புல பெரும்பகுதி நீரால சூழப்பட்டு இருந்தாலும்.  மூன்றாவது உலகப்போர்னு ஒண்ணு வந்தா , அதுக்கு முக்கிய காரணியா இந்த தண்ணிதான் இருக்கும்னு ஒரு கணிப்பு இருக்கு இன்னைக்கு.

                      தாகம் தீர்க்குற இந்த நீருக்கு, உணர்வுகளை தன்னுள் எளிதில் ஈர்த்துக் கொள்ளும் தன்மை இருக்கு. எல்லா மதவழிபாடுகள்லயும்  நீருக்கு முக்கிய இடமுண்டு. இந்து சமயத்தில, கோயில்களுக்கு  சக்தியூட்ட கும்பாபிஷேகம் பண்ணுவாங்க. பன்னிரண்டு வருசத்துக்கு ஒரு தடவ  நடக்குற இந்த விழாவில, கலசங்களில் நீர் வைத்து அதுக்கு பக்கத்துல  உக்காந்த்துகிட்டு , நாப்பத்தெட்டு நாள்கள் மந்திரங்கள் ஓதுவாங்க. அந்த மந்திரங்களைச் சொல்லச் சொல்ல ஏற்படுகிற சக்தி அதிர்வுகளை இந்த நீர் , தனக்குள் ஈர்த்துக் கொள்ளும். அதுனால மந்திரங்களின் சக்தி அந்த நீருக்குள் இறங்கிரும்,  அந்தப் புனித நீரைத்  கோயிலுக்குள்ளயும்  அங்கருக்குற மக்கள் மேலயும் தெளிப்பாங்க. இப்பிடி பண்ணுறதுனால கோயிலின் சக்தி பெருகும்னு ஐதீகம்.

                பொறந்த குழந்தைகளுக்கு பேரு வைக்குறப்ப இந்தப் புனித நீர தெளிக்குற வழக்கம் இருக்கு சில மதங்கள்ல. இதுனால அந்தக் குழந்தைகள் புனிதமடைவதா ஒரு நம்பிக்கை இருக்கு நோயாளிகள்  இந்த தண்ணிர குடிச்சா எந்த வித நோய்களிலிருந்தும் விடுபடமுடியும்னு தீவிரமா நம்புறவங்களும் உண்டு இங்க.

                     வீடுகள்ல தீபாவளி,பொங்கல், நவராத்திரி போன்ற சமயத்துலய நடத்துற பூஜைகள்ல கூட நிறைந்த தம்ளரயோ இல்ல நிறைந்த ஒரு செம்பையோ வைச்சு  சாமி கும்பிடுற பழக்கம்  நிறைய குடும்பங்கள்ல இன்னும் இருக்கு.

                        அந்தக்  காலத்துல ரிஷிக்களும் முனிவர்களும் கைல வச்சிருக்குற கமண்டலத்துல  உள்ள நீரை தெளிச்சு மக்கள வாழ்த்துவாங்க.அவங்க சொன்னது சொன்ன மாரியே பலிக்கும். கமண்டலத்துல இருக்குற நீருல ரிஷியோட தவத்தின் சக்தி இறங்கிருக்கும். அதுனால ரிஷிக்களும் முனிவர்களும் சொல்லும் வாக்கு அப்பிடியே பலிச்சது. இத நம்ம புராணங்கள்ல பாத்துருப்போம்.
         
                  உணர்வுகள  உள் வாங்குற தன்மையுள்ள நீருக்கு அது நல்ல உணர்வு கெட்ட உணர்வுனு பிரிச்சு பாக்கத் தெரியாது. அதுனாலதான்  அந்தக் கால பெரியவங்க, சில இடங்கள்ல, சிலர் வீடுகள்ல தண்ணி வாங்கி குடிக்க மாட்டாங்க.  தண்ணி குடுக்குறவங்களோட மனநிலையை தண்ணீர் அப்பிடியே கிரகிச்சிக்கும். அவங்க கோவமான மனநிலைலயோ.. இல்ல எதிர்மறை சிந்தனை உடையவங்களாகவோ  இருந்தா, அந்த உணர்வுகள் இலவசமா நமக்குள்ள டவுன்லோட் ஆகிரும்னு தண்ணிய வெளில வாங்கிக் குடிக்கமாட்டாங்க.  அதே மாரி கெட்ட சூழ்நிலைகள்ளயும் தண்ணி  வாங்கி குடிக்கமாட்டாங்க. அந்த இடத்துல இருக்குற எதிர்மறை சக்தி நமக்குள்ள வந்து நம்ம எண்ண ஓட்டத்தயும் மாத்திரும்னு  குடிக்க மாட்டாங்க.

            எடுப்பார் கைபுள்ள மாரி இருக்குற இந்த  சக்தி வாய்ந்த தண்ணிய நாம எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்ளோ கெடுக்குறோம். ஜீவ நதிகள புனித நதிகளா வணங்குற பழக்கம் நம்மகிட்ட இருக்கு. அந்த நதிகள்ல   முங்கிக் குளிச்சா மக்களோட பாவங்கள்லாம்  கரைஞ்சிரும்னு தீவிர நம்பிக்கை மக்களிடையே இருக்கு. புனித நதியா நாம வணங்குற கங்கை நதிக் கரைல இருக்குற, காசில போய் ஒருத்தர் செத்தா அவரோட உடலை அப்பிடியே எரியூட்டாம நதில மிதக்க விட்டுருவாங்க சில பேரு. சில பேரு செத்தவங்களோட அஸ்தியக் கொண்டுவந்து காசில கரைப்பாங்க.. செத்துப் போன உடலு சொர்க்கத்துக்குப் போகனும்னு ,உயிரோட இருக்குற புனிதமான நதியையே சாகடிக்குற எல்லா வேலையையும் நாம செய்யுறோம்.

               நீர்நிலைகளத் தொலச்சிட்டு மழைநீர சேமிக்க முடியாம நமக்கு நாமே குழி தோண்டிக்கிட்டு இருக்கிறோம். நதிகளை கால்வாயா மாத்துன பெருமை இந்த தலைமுறைக்கு தான் கிடைச்சிருக்கு.
நீர்நிலைகளை தூர்வாருனா .. இல்ல ஆழப்படுத்துனா நம்மளோட நீர் ஆதாரங்களை நம்மளால பல மடங்கு பெருக்க முடியும்.  இதுனால விவசாயம் அதிகரிக்கும் .விலைவாசி  குறையும். இந்த வேலையை  அரசாங்கம் தான் செய்யனும்னு இல்ல. நம்ம கடமையை உணர்ந்து, அந்தந்த பகுதி மக்கள் இணைந்து செய்யலாம். இப்பிடி செஞ்சா,தண்ணீர் பற்றாக்குறை இருக்காது .வீட்டுத் தேவைகளுக்கு,விலங்குகளுக்கு, கால்நடைகளுக்கு தொழிற்சாலைகளுக்குனு எல்லாத் தேவைகளுக்கும் தண்ணீர் போதுமான அளவு கிடைக்கும். நீர் மேலாண்மையை சரிவர செஞ்சோம்னா நீர் வளத்த பெருக்க முடியும். நிலத்தடி நீரும் பெருகும்.

                 உலகத்துலயே நீர் இல்லா நகரமாக தென்னாப்பிரிக்கால இருக்குற கேப்டவுண் நகரம் இருக்குறத நாம  நினைவில்  வச்சிருக்கனும் .தமிழ்நாடுக்கு இந்த நிலை வருவதற்கு முன்னாடியே கொஞ்சம் விழிப்புண்ர்வோடு செயல்பட்டா நம்ம சந்ததி நம்மள வாழ்த்தும்.. சந்ததிகளுக்கு வெறும் சொத்து மட்டும் சேத்துவச்சா ஒரு பிரயோஜனமும் இல்ல அடுத்து வர்ற சந்ததி நல்லா வாழ்றதுக்கு ஏத்த சூழ்நிலைய தர்றோமாங்குறதுதான் முக்கியம். நல்ல வளமிக்க நாட்டை விட்டுட்டு போகணும்..அப்பத்தான் மனித சமுதாயமும் செழிக்கும்...நாடும் வளமிக்கதா மாறும்...

ஞாயிறு, 9 டிசம்பர், 2018

இலவசமாய் சில இலவசங்கள்



                                        ஒருத்தர் கிட்ட நமக்கு ஒரு வேலை ஆகணும்னா என்ன செய்வோம்?.. ரெண்டு தடவ கேட்டு பாப்போம். கேக்கலைனா நீ செஞ்சு குடுத்தா நான் உனக்கு இத செய்யுறேன்னு ஆச  காட்டி பேரம் பேசுவோம். அதே மாரி தான் நாம சின்னப்புள்ளையா இருக்குறப்ப நம்ம அம்மா கடைல இருந்து இத வாங்கிட்டு வந்தா உனக்கு இது தருவேண்னு சொல்லிச் சொல்லியே நம்ம கிட்ட வேலை வாங்க்கிருப்பாங்க. நாமளும் அவங்க குடுக்குற சாக்லேட் இல்ல ஐஸ்கிரிம் திங்குற ஆசைல சொன்ன வேலைய  செஞ்சு குடுத்துருப்போம்.

                                 கொஞ்சம் பெருசா ஆனப்பெறகு ஸ்கூல்ல் ஹோம்வொர்க் எழுதிக்குடுக்குறதுக்குன்னு சில பசங்க இருப்பாங்க... அவிங்களுக்கு வேணுங்க்ற தீனி குடுத்தா போதும் பரிச்சய கூட  நமக்காக அவிங்களே எழுதிருவாய்ங்க...

                         அப்பிடியே ஸ்கூல முடிச்சிட்டு காலேஜ்க்கு போனா அங்க நோட்ஸ் எழுதுறதுக்கு, நம்ம கூட சேந்து வீட்ல பொய் சொல்லி காசு ஆட்டய போடுறதுக்கு, நாம விரும்புற பொண்னுகிட்ட நம்ம லவ்லெட்டரக் கொண்டு போய் குடுக்குறதுக்குனு ஒரு ஆளு நம்ம கூடவே இருப்பான்.. அவிங்கள, நாய்க்கு பிஸ்கட் போடுற மாரி அப்பப்ப கொஞ்சம் கவனிச்சா போதும்.
நம்ம முதுகு தப்பிச்சிரும்.

                     இலவசம்னாலே எனக்கு ஒண்ணு எங்க அப்பாக்கு ஒண்ணுனு கேக்குற காலத்துல தான் இருக்கோம். நோகாம நொங்கு உரிக்கனும். கஷ்டப்படாம எல்லாமே வேணும் நெனைக்குற மக்கள் அதிகரிச்சுக்கிட்டே இருக்காங்க இப்ப.

            இப்பிடி நம்ம வேல  ஆகணும்னா ஏதாவது ஒரு பொருள இலவசம்ங்ற பேருல லஞ்சமா குடுக்குறது காலகாலாமா நடந்துக்கிட்டு இருக்குற விசயம் தான். இருந்தாலும் , இன்னிக்கு நெலமைல இந்த இலவசம், மக்கள எந்த அளவுக்கு கெடுத்து வச்சிருக்குன்ன்னா மனிதன் சுயமா சிந்திக்கிறத கூட மறந்துட்டு இலவசங்கள் பின்னால போக ஆரமிச்சுட்டான்.

                             இலவசங்கள காட்டிக்  காட்டியே மனுசன  நாய்குட்டியாக்கிருச்சு இந்த உலகம். தனக்கு அந்தப் பொருள் தேவையா இல்லயானுலாம் யோசிக்கவே விடுறதில்ல. ஒண்ணுக்கு ஒண்ணு இலவசம், மூணு சட்டை வாங்குனா ஒண்ணு ஃப்ரீனு மனுசன் தலைல கட்டிர்றாங்க. சிலசமயம் நாலுக்கு ஒண்ணு சொத்தையா போய்ருது..அப்ப கூட , கஷ்டப்பட்டு உழைச்ச  காசு வீணாப் போகுதேனு நெனைக்காம நாலுல ஒண்ணு தான போச்சு.. போனாப் போகுதுனு நமக்கு  நாமளே சமாதனமும் சொல்லிக்குற அளவுக்கு மக்கள் இலவசங்களுக்கு  மனதளவுல அடிமையாகிட்டாங்க.

                      மனுசனோட சிந்தனைகள் நுகர்வு கலாச்சாரத்துக்கு அடிமையாகிருச்சு...தேவையோ தேவையில்லயோ...தான் அந்தப் பொருள வாங்கிரணும். பொருட்காட்சில  அழகா காய் வெட்டிக்குடுக்குற சின்ன மிசின ஆசப்பட்டு வாங்கிட்டு வந்துருப்போம்.வீட்டுல வச்சு நாம ட்ரை பண்றப்ப அது நமக்கு பெப்பே காட்டிட்டு மூலைல போய் உக்காந்துருக்கும். அடுத்த  பொருட்காட்சிக்குப் போய், அதயே திரும்ப வாங்கிட்டு வந்துருப்போம்.

                 அதே மாரி தான் டிசைன் செருப்பும்...பாக்குறதுக்கு நல்ல பளபளனு இருக்கும்..அழகா இருக்கேனு வாங்கிட்டு வந்த நாலு நாள்ல பல்ல காட்டிரும் அந்த செருப்பு. அப்பவும் அந்த ஆச விடுதானு பாத்தா..இல்ல.. திரும்பவும் அதே மாரி அழக பாத்து வாங்கிட்டு வருவோம். செருப்போட உழைப்ப பாக்காம அழக பாத்து வாங்குற பழக்கம் எங்க இருந்து வந்துச்சு?

                  இப்ப கொஞ்ச நாளா ஆன்லைன்ல பொருள்கள் வாங்குற பழக்கம் நாளுக்கு நாள் கூடிக்கிட்டே வருது...மொதலாம் தீபாவளி, பிறந்தநாள்னா தான் வீட்டுல  புது துணி வாங்குவாங்க.. இந்த ஆன்லை கலாச்சாரம் வந்த பெறகு, வருசம் முழுசும் வாங்கிட்டே இருக்கோம். தேவையோ இல்லயோ ஒரு ஆஃபர் போட்டா வாங்கிரனு நமக்கு...அந்த அளவுக்கு நுகர்வு கலாச்சாரம் அடிமையாக்கிருச்சு.

          ஒரு ஆஃபரோ இல்ல இலவசமோ எப்பிடி குடுக்க முடியுதுனு கொஞ்சம் யோசிச்சா நாம இந்த அளவுக்கு அடிமையாகிருக்க மாட்டோம். நுகர் பொருள்களின் மேல இருக்குற இந்த அடிமைத் தனத்துனால நம்மளுக்கு எதுலயுமே திருப்தி கெடைக்கவே மாட்டேங்குது.. இன்னும் இன்னும்னு நம்ம மனசு நிலையில்லாம தவிக்குது... நம்ம மனசுக்கு தீனி போட்டு தீனி போட்டு கட்டுப்படியாகாத ஒரு நெலைம வர்றப்ப நம்மள மாத்திக்கவே முடியாது..வாழ்க்கை வெறுமையாகிரும்..இது என்ன வாழ்க்கைனு தோண ஆரமிச்சுரும்..

                சோ, நம்ம சிந்திக்கும் திறன கொஞ்சம் தூசி தட்டி மனசுக்கு ஒரு கடிவாளம் போட்டா போதும் .. நம்ம வாழ்க்கைல  சலிப்பு என்னைக்குமே எட்டிப்பாக்காது. நம்ம பர்ஸ்ஸும் பத்திரமா இருக்கும். டைம்மும் வேஸ்ட் ஆகாது. சிந்திப்போம்...

வெள்ளி, 7 டிசம்பர், 2018

பணம் என்னும் மந்திரவாதி.

                                           பணம் ..

                   தொவண்டு கிடக்குற  நம்ம வாழ்க்கைய ஒளிமயமா ஆக்குற ஒரு மந்திரவாதி எதுனு பாத்தா  இந்தப் பணம் தான். நம்ம மொபைலத் தவிர, நம்ம கூடவே இருக்கனும்னு   இந்த உலகமே விரும்புற ஒரே பொருள் இது தான். வர்க்கபேதம், நிற பேதம் , மேலை நாடு, கீழை நாடுனு எந்த வித்தியாசமுமில்லாம ஏழை பணக்காரன்னு எல்லா மக்களும் தேடி ஓடுறது பணத்த நோக்கி தான்.  எனக்கு பணம் வேண்டாம்னு சொல்ற ஆளு யாருமே இல்ல. அப்பிடி யாராது சொல்றாங்கன்னா அவங்க பொய் சொல்றாங்கன்னு தான் அர்த்தம்.

               எல்லாரும் விரும்புற  இந்தப் பணத்தை  அதிகமா வச்சுருக்கவங்களப் பாத்தா எல்லாருக்கும் ஒரு கடுப்பு , ஒரு பொறாமை வரத்தான் செய்யுது. இந்தக் கடுப்பு தான் நிறைய எதிர்மறையான கருத்துக்கள உருவாக்குது.... பணக்காரன்னா நேர்வழில சம்பாதிச்சுருக்க மாட்டான்னு நூத்துக்கு தொண்ணூறு சதவீதம் நம்புறோம்.. பணம் இருக்குறவன் சாதாரணமா எது செஞ்சாலும் பணத்திமிருனு ரொம்ப ஈசியா பேசிருவோம்...பணம்  இருக்குற இடத்துல குணம் இருக்காது.. அவன்கிட்ட பணம் இருக்குல... செஞ்சா என்னனு வாய் கூசாம கேப்போம்... என்னமோ பணம் அவன் வீட்டுத் தோட்டத்துல காய்க்கிற மாரி.
                       பணத்து மேல விருப்பம் இருக்குற அளவுக்கு அதை சம்பாதிக்க முயற்சி செய்யூறோமானா இல்ல.. விடாமுயற்சி செய்ய விரும்பாத நாம, கடின உழைப்பால பணம்  சம்பாதிக்குறவங்கள் குறை சொல்றதுக்கு மட்டும் தயங்குறதே இல்ல..

                   அந்தப் பணத்த சம்பாதிக்க  ஒவ்வொருத்தனும் எவ்வளவு நாயா பேயா அலயுறான்.  நாம என்ன செஞ்சிக்கிட்டு இருக்கோம்னு  யோசிக்குறதில்ல நாம..அவன் ஆரம்பகட்டத்துல தூக்கத்த கண்டிப்பா தியாகம் செஞ்சிருப்பான்..வீட்டுல நடக்குற நல்லது கெட்டதுக்கு வந்து போயிருக்கமாட்டான்.. குடும்பத்தோட உக்காந்து பேசி சிரிச்சிருக்க மாட்டான்..
சமயத்துல அவன் பிள்ளைக மூஞ்சையே அவன் பாத்து ரொம்ப நாளாயிருக்கும்... விதை போட்டு அத பாத்து பாத்து வளக்குற,  தோட்டக்காரன் மாரி அவனோட தொழிலையோ, இல்ல , பாக்குற வேலையையோ பாத்து பாத்து  வளத்ததுனால தான் இன்னைக்கி அவன் பெரிய மரமா நிக்க முடியுது

                        அப்பிடி ஓடி ஓடி அவன் எதுக்கு இப்பிடி சம்பாதிக்கனும்? பந்த பாசத்த விட பணம் தான் பெருசாப் போச்சா? னு அறிவாளிமாரி கேள்வி கேக்குறதுக்கு  முன்னாடி, ஒரு குடும்பத்த நல்லபடியா கொண்டு போறதுக்கும், புள்ளகுட்டிக விரும்புனத  படிக்க வைக்கிறதுக்கும்  அவங்களுக்கு வேணும்ங்க்றத  வாங்கிக் குடுக்குறதுக்கும்   பணம் எவ்வளவு முக்கியம்னு தெரிஞ்சிருக்கும்.  இருந்தாலும் நாம பணக்காரன கொறை சொல்லிக்கிட்டே தான் இருப்போம்.

                     என்கிட்ட  பணம்லாம்  இல்லைனு சின்ன வருத்தம் கூ ட இல்லாம நம்மளா  சொல்ல முடியுமா? முடியாதுல....ஏன்னா நமக்கும் பணம் முக்கியம்... ஆனா நான அத வெளிப்படுத்துறதில்ல.. பணம் வேண்டாம்னு சொல்றவங்க ,இனாமா ஒரு பத்தாயிரம் தேடி வந்தா வேண்டாம்னு முகத்த திருப்பிக்குவாங்களா?  மாட்டாங்க... அதான் பணத்தோட கெத்து..தன்ன வேணாம் வேணாம்னு சொல்றவனையே  விரும்ப வச்சிரும் பணம்..

                பணம் இருக்குறவன்லாம் கெட்டவன்ங்க்ற அபிப்பிராயம் எப்பிடிதான் வந்துச்சோ தெரில..  பணம் இருந்தா  மத்தவங்களுக்கு உதவி செய்யமுடியும்  யார் கையையும் எதிர்பாத்துருக்க வேண்டியதில்ல. பணம் இல்லாம  நியாயமான ஆசைகளகூட  அடைய முடியாம  போறப்ப தான் நம்ம மேல நமக்கே  வெறுப்பு வந்துரும்.  நம்மளோட ஆசைகள நிறைவேத்திக்குறப்பதான்  நமக்கே நம்ம மேல நல்ல மரியாதை வரும். சுயமதிப்பு கூடுது. நம்மளால முடியும்ங்ற  தன்னம்பிக்கை வருது.  தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தாப் போதும். நம்ம இலக்குகள ஈசியா அடஞ்சிரலாம்.
                      பணம் ஒரு நல்ல உற்சாகமூட்டி.. அது நம் கைக்கு வந்ததுமே, இல்ல  அத கண்ணால பாத்ததுமே நம்ம பேச்ச நம்ம மனசே கேக்காது... றெக்க கட்டி பறக்க ஆரமிச்சுரும்.  இந்த உலகத்தையே  விலை பேசிரலாமானுகூட தோணும்.. உற்சாகமான மனசோட எது செஞ்சாலும் அது சிறப்பா அமையும்..நாம் ஒரு ஸ்டெப் பணத்த நோக்கி எடுத்து வச்சோம்னா , பணம் நம்மள நோக்கி ரெண்டு ஸ்டெப் முன்னாடி வரும்... வேணுமன்னா ஒரு தடவ முயற்சி செஞ்சுதான் பாருங்களேன்..
                இவ்வளவும் தெரிஞ்சுகிட்டும், போதுங்குற மனசே  பொன் செய்யும் மருந்துனு பழச பிடிச்சு தொங்கிக்கிட்டு இருக்காம,   இன்னும் கொஞ்சம் வேணும்னு நெனச்சு பணத்த நல்ல வழில  சம்பாதிக்க வழி என்னனு பாக்க ஆரம்பிப்போம்.. சம்பாதிச்சத சரியான முறைல சேமிச்சு வைக்குறது கூட ஒரு வகையான வருமானம் தான்..இரண்டாவது ஒரு வருமானம் வர்ற மாரி ஏற்பாடு செஞ்சுக்குறது  நம்ம கடைசி காலத்த நிம்மதியா திருப்தியா வாழ் உதவும். இல்லனா ,காலம் முழுவதும்  ஓடிக்கிட்டே இருக்க வேண்டியாதாகிரும்.
                பணம்  நல்ல விசயம் தான்..எல்லாருக்குமே அதை அடைய அனுபவிக்க உரிமை இருக்கு...நம் விருப்பங்கள அடைறது, மகிழ்ச்சியான் வாழ்க்கை வாழுறது, நாலு பேருக்கு உதவிகரமா இருக்குறதெல்லாமே நம்மளோட பிறப்புரிமை...நம்ம உரிமையை மீட்போம்...

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

வாழ்த்துவோம்....வளருவோம்...


வாங்க வளரலாம்




                                  வார்த்தைகள்  மொழிக்கு எவ்வளவு முக்கியமானதோ அதே மாரி மனுசனோட வளர்ச்சிக்கும் ரொம்ப ரொம்ப முக்கியமானது.. மனுசனோட வாழ்க்கைல சொற்களோட பங்கு மிகப் பெருசு. ஒருத்தங்க யூஸ் பண்ற வார்த்தைகள வச்சே சமயங்கள்ல, அவுங்கள ஈசியா எடை போட்றலாம்.  அவுங்க மூட் எப்பிடி இருக்குனும் சொல்லிறலாம். அவ்வளவு சக்தி வாய்ந்தது வார்த்தைகள்.

                           பண்பட்ட ,நாகரீகமான மனுசங்க நல்ல  உயர்ந்த சொற்களையே சொல்லுறத நாம பாத்துருப்போம். காயப்படுத்தாத வார்த்தைகள் மட்டுமில்லை உயர்வைத்   தரக்கூடிய வார்த்தைகளையும் ,ஒவ்வொரு மனுசனும் பேசக் கத்துக்கனும். காயப்படுத்தக்கூடிய,காயப்படுத்துன வார்த்தைகள் ஜென்ம ஜென்மத்துக்கும் நினைவ விட்டு போகாது. அதுனால பேசுற வார்த்தைகள்ல கவனமா இருக்கனும்.

                குறைகள் சொல்ல, காயப்படுத்த மட்டும் இல்ல  ஒரு மனுசன வளர்த்துவிடுவதும் வார்த்தைகள் தான். மத்தவங்கள நாம் வாழ்த்துற ஒவ்வொரு முறையும் நாமும் ஒரு அடி முன்னாடி போகிறோம்.  நம் வாழ்க்கையில. நாம பேசுற வார்த்தைகள் கேட்டு, வானத்துல இருக்குற தேவர்கள் 'ததாஸ்து'னு சொல்லுறதா பெரியவங்க சொல்லுவாங்க.. .அப்பிடினா என்ன அர்த்தம்னா,  'அப்பிடியே ஆகட்டும்.. அதுனால நல்ல வார்த்தைகளையே பேசனும்னு சொல்லுவாங்க...

                           தேவர்க்ள் ததாஸ்துனு சொல்லுறாங்களா இல்லையானு எனக்குத் தெரியாது. ஆனா, மனுச மனசுக்கு ஒரு தன்மை இருக்கும். நல்ல விசயம் பேசுறப்ப, நல்ல வார்த்தைகள பேசுறப்ப, கேக்குறப்ப மகிழ்ச்சியடையுறது தான் அது.. யாராது நம்மள பாராட்டிட்டா நம்மள கைல பிடிக்கவே முடியாது. மகிழ்ச்சியா இருக்குற மனசு யாருக்கும் கெடுதல் நெனைக்காது.   சந்தோசமா இருக்குறப்ப நம்மளால தெளிவா சிந்தித்து செயல்பட முடியும்.அதுனால நம்ம குறிக்கோள ஈசியா அடைய முடியுது...

                நாம கேக்குற வார்த்தைகளுக்கே இவ்வளவு சக்தி இருக்குறப்ப, அந்த வார்த்தைகள நாம பேசுறப்ப எவ்வளவு நல்லது நடக்கும். மத்தவங்கள நாம வாழ்த்த வாழ்த்த, நம்ம எண்ணங்கள் யாவும் அப்பிடியே  நடக்கும்...நம்ம லட்சியங்கள, குறிக்கோள்கள, ஆசைகள எளிதா அடைய முடியும். அதுமட்டுமில்ல, நம்மளோட சந்தோசம் மத்தவங்களுக்கும் அப்பிடியே பத்திக்கும். நாம இருக்குற இடம், நம்மள சுத்தி இருக்குற எல்லாரும் மகிழ்ச்சியா இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்... எவ்வளவு உற்சாகமா, ஒரு உத்வேகத்தோட நம்மாளல  அலுவலகத்துலயும் தொழில்லையும் ஈடுபாட்டோடு உழைக்க முடியும்..எவ்வளவு பொருளாதார முன்னேற்றம் நடக்கும்... நெனைச்சாலே ,சந்தோசமா இருக்குல. புது ரத்தம் உடம்புல ஓடுற மாரி இருக்குல...
 நாம் சாதாரணமா நெனைச்சுக்கிட்டு இருக்குற வார்த்தைகள் நம்ம வாழ்க்கைல  எவ்வளவு பெரிய ஒரு மாயாஜாலத்தையே நடத்திக்காட்டுது பாத்தீங்களா. அப்பிடிப்பட்ட  நல்ல வார்த்தைகள  இந்த நொடிலருந்தே பேச ஆரம்பிப்போம்...நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமா முன்னேறுவோம்...

சனி, 1 டிசம்பர், 2018

நம் வாழ்வை நாமே உருவாக்குவோம்...







                            மத்தவங்க மகிழ்ச்சியா இருக்கறதப் பாத்து நம்ம மனசு ஒரு மாதிரி தவிக்குதா? என் வாழ்க்கை மட்டும் ஏன் இப்பிடி இருக்கு?
  எனக்கு மட்டும் சாண் ஏறுனா முழம் சறுக்குதே..அவன்லாம் நல்லா இருக்கானே....என்னால மட்டும் ஏன் அப்பிடி இருக்க முடில?
இது மாரி எவ்வளவோ கேள்விகள் நம் மனசுல அப்பப்ப வந்துகிட்டு தான் இருக்கு...நமக்கு மட்டுமில்ல எல்லார் மனசுலயும் வர்ற கேள்விகள் தான் இதெல்லாம்...இந்தக் கேள்விகளுக்கு என்னைக்காது நாம பதில் தேடிருக்கோமானு பாத்தா.... பெரும்பாலான பதில்கள் இல்லங்குறது தான். கேள்விகள் மட்டுமே கேட்டுகிட்டு இருந்தா  வாழ்க்கை மாறிருமானு நாம் யோசிக்குறதில்ல. எதுனால நாம வருத்தப்படுற மாரி நிகழ்வுகள் நமக்கு நடக்குது...எந்த இடத்துல தவறுகிறோம்...எப்பிடி அத சரி பண்றதுனு நாம யோசிச்சி பாத்தா வேர் எங்கனு ஈசியா கண்டுபிடிச்சுரலாம்...

               நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச  ஒரு பழமொழி  'வினை விதைத்தவன் வினை அறுப்பான்'..  இதோட உள்கருத்து என்னன்னு நாம சிந்திச்சு கூட பாத்ததில்ல.. 'ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர் வினை உண்டு'னு ஐசக் நியுட்டன் சொல்லிருக்கதும் அறிவியல்ல ஆர்வமிருக்குற எல்லாருக்கும் தெரியும். 'கொடுங்கள் அப்போது உங்களுக்கும் கொடுக்கப்படும்'னு ஏசு சொல்லிருக்கிறார்னு பைபிளும் சொல்லுது...

இதெல்லாத்துக்கும் அடிப்படை என்னனு பாத்தா....நாம் என்ன நெனைக்குறொமோ அது தான் நடக்கும்…நாம என்ன செய்யுறோமோ  அதே தான் நமக்கும் நடக்கும்ங்குறது தான். மறைமுகமா இதத்தான் எல்லாரும் சொல்லிருக்காங்க.. நாம  செய்யுறது தான் நமக்கு திரும்பக் கிடைக்கும்னா நாம ஏன் நல்லது மட்டுமே செய்யக்கூடாது? நல்லத மட்டுமே நினைக்கக்கூடாது? இப்பிடி என்னிக்காது  யோசிச்சிருக்கோமா?

               நம்மளோட வார்த்தைக்களுக்கு அதிகப்படியான சக்தி இருக்கு…அதுனால தான் அந்தக் காலத்துல நல்ல வார்த்தைகள் மட்டும் பேசுனாங்க..சினிமாக்கள்லயும் கூட நல்ல விசயங்களும் நல்ல வார்த்தைகளுமே பேசினாங்க…ஆனா  இன்னைக்கு? தொலைக்காட்சியும் சரி… சினிமாக்களும் சரி நல்ல விச்யங்கள விட தவறான் விசயங்களையும் தவறான வார்த்தைகளையும் சமூகத்துக்கு குடுத்துக்கிட்டு இருக்காங்க..சிறு சிறு குழந்தைகள் கூட இதனால எளிதாக சரியான் பாதைல இருந்து விலகிடுறாங்க…. விளைவு…சமூகக் கேடுகள்..

நல்ல விசயங்கள பேசுறப்ப நல்ல விசயங்கள் கேக்குறப்ப நம்ம மனம் அமைதியா இருக்கும். அமைதியான மனசால தான் நல்ல திறம்பட செயல்பட முடியும். அதோட பலனும் அதிகமா இருக்கும். நல்லது செஞ்சா திரும்ப நமக்கு நல்லது தான் நடக்கும்... நல்லது நெனச்சாலும்  நல்லது நடக்கும். அன்பக் குடுத்தா அன்பு தான் திரும்பக் கிடைக்கும்...புன்னகையக் குடுத்தா புன்னகை தான் திரும்பக் கிடைக்கும்...இப்பிடி எல்லாமே நம்ம கைல  இருக்குறப்ப நாம எதுக்குவீணா பொலம்பணும்.    நம்ம விருப்பப்படி வாழ்க்கையை அமைச்சுக்கலாமே.. அது நமக்கு ஏன் தெரில...?
ஒவ்வொரு தடவயும் நாம வருத்தப்பட்டு பொலம்ப பொலம்ப,  சோகமான எண்ணங்களையும், சோக உணர்வுகளையுமே வெளிப்படுத்திக்கிட்டு இருக்குறோம்ங்க்றத மறந்துற்றோம்.. அதன் விளைவு தான் எல்லாமே நமக்கு எதிராவே நடக்குறது...
நம் ஆசைகள  கனவுகள அடைய எளிய வழி அன்பா இருக்குறதும் நல்லத நெனைக்குறதும் நல்லத செய்யுறதும் தான்.. இந்த ரெண்டு நிலையிலயும் வார்த்தைகள் நாம் பயன்படுத்துற வார்த்தைகள்  முக்கியம். வார்த்தைகள் நம்ம மனநெலயை காட்டுற கண்ணாடி.  அன்பான வார்த்தைகள பேசுறப்ப மத்தவங்களுக்கும்  நம்மகிட்ட  அன்பா இருக்குறது, அன்பா பேசுறத தவிர வேற வழியே இல்ல.  நம்ம உலகம் அன்பா இருக்குறப்ப அன்பு நிறைந்த நிகழ்வுகளை  நாம ஈர்த்துக்கொண்டே இருக்கிறோம்..அதுனால நாம மகிழ்ச்சியா இருப்போம்.. எந்த உணர்வுகளை வெளிப்படுத்துறோமோ அதே உணர்வுகளைத்தான் ஈர்க்கிறோம்.அதுனால நம்ம வார்த்தைகளும் உணர்வுகளுமே நாம ஆச படுற வாழ்க்கைய வாழத் தேவையான அஸ்திவாரக்கற்கள்...இந்தக் கற்கள் மேல  கட்டுற வாழ்க்கை மிகச்சிறப்பா இருக்கும்.

            காய் கவர்ந்தற்றுங்ற வள்ளுவர்  வாக்கு மனசுல நல்லா பதிய வச்சுக்கிட்டா போதும்.. நம் வாழ்வின் போக்கை நம்ம விருப்பத்திற்க்கு ஏத்த மாரி  நம்மளால  உருவாக்கிக்க முடியும்.. 

தீதும் நன்றும் பிறர் தர வாரா...

நம் வாழ்க்கையை நாம் உருவாக்குவோம்..





செவ்வாய், 30 அக்டோபர், 2018

சிமிலாரிட்டி சைன்ஸ்



முன்னோர் வாக்கு வேதவாக்கு


                           நம்ம வீட்டுப்  பெரியவங்க நம்மள எப்பப் பாத்தாலும் நேரா நில்லு, காலை அகட்டி உக்காராத, தலைய இப்பிடி சொறியாத, நிமிந்து நட,காலை ஆட்டாத ,  சுத்தபத்தமா இரு, அப்பிடி செய் ,இப்பிடி செய்னு நிறைய அறிவுரைகள சொல்லிட்டே இருப்பாங்க. நம்ம தோற்றத்துலயும் நடவடிக்கைகள்லயும் பாக்குறதுக்கு நல்லா இருக்கனும்ங்கறது தான் அவுங்களோட தியரி. கொஞ்ச நாளைக்கு அத கேக்குற நாம  ஒரு கட்டத்துல காதுலயே வாங்கிக்குறதில்ல அவுங்க பேச்ச.

                       நாம வளந்த பெறகு கூட அவுங்க எதுக்கு அப்பிடி சொன்னாங்கனு  என்னைக்க்காது  யோசிச்சு பாத்துருப்போமா? யோசிக்குற பழக்கமே நம்மகிட்ட கெடயாதே..இருந்திருந்தா நாம இப்பிடி இருப்போமா?
ஒரு மனுசன் எப்பிடிப்பட்டவன்,அவன் குணம் என்னனு நம்மளோட நடவடிக்கைகளை வச்சே சொல்லிரலாம்.. நம்ம நடக்குற ஸ்டைலு, நிக்குற ஸ்டைலு, நம்ம அறை சுத்தமா இருக்கா இல்ல அங்கங்க துணிமணியா இருக்கா ,நம்ம உடம்ப சுத்தமா வச்சுருக்கமா இப்பிடி  நெறய சொல்லலாம். இதெல்லாம் வச்சே நம்மள மத்தவங்க எளிதா எடை போட்டுருவாங்க..எப்பிடி நம்ம கையெழுத்த வச்சு நம்ம குணநலன்கள சொல்ல முடியுமோ அதே மாரி தான் இதுவும்.

                          அதே மாரிதான்  நம்மகிட்ட சில குணங்கள் இருக்கும் அத வச்சே நாம எப்பிடி கஸ்டப்படப் போறோம்னு கூட நம்ம வீட்டுலலாம் முன்கூட்டியே கணிச்சுருவாங்க..உதாரணமா சில பேரு எதுக்கெடுத்தாலும் முந்திரிக் கொட்டைகெனக்கா முந்திகிட்டே இருப்பான் எல்லா விசயத்துலயும். ஸ்கூல்ல படிக்குறப்ப பக்கத்து பையன்கிட்ட கேட்ட கேள்விக்கு நாம எந்திருச்சு பதில் சொல்றது,[நமக்கு எல்லாம் தெரியும்ங்ற கர்வம்] நம்ம கிட்ட கேக்காதப்ப போய் வாலண்டியரா உதவி பண்ணி சிக்கல்ல மாட்டிக்குறது .. [நாம  தாராளமான் மனசுக்காராங்கனு உலகத்துக்கு காட்டுறதா நெனப்பு நம்மளுக்கு]..நம்ம வீட்டுலயும் தலையா அடிச்சிக்குவாங்க.  உன்னக் கொஞ்சம் மாத்திக்க்கோ ...இல்லனா சிரமப்படுவனு...அதே மாரி நாமளும் ஏதாவது ஒரு சிக்கல்ல கரெக்டாம  மாட்டுவோம்.

                   இதுக்கெல்லாம் என்ன காரணம் இருக்கும்? இந்த உலகத்துல எதுவுமே தானா நடக்குறதில்ல..எல்லா நிகழ்வுகளுமே ஒருவித சங்கிலித் தொடர் மாரி தான்... ஒண்ணுக்குள்ள ஒண்ணு கனெக்ட்  ஆகிருக்கு..இதுக்கு பட்டர்ஃப்ளை எஃபெக்ட் னு பேரு குடுத்தாரு அமெரிக்க வானிலை ஆராய்ச்சியாளர் எட்வர்ட் நார்டன் லாரென்ஸ்.
                ஒரு இடத்துல வண்ணத்துப் பூச்சிகள் ஏராளமா தங்களோட சிறகுகளை வேகமா துடிக்க துடிக்க ஆட்டிக்கிட்டு இருந்தா பூமியோட ஏதாவது ஒரு மூலையில சூறாவளி உருவாகி வந்துகிட்டு இருக்குனு அவர் நிருபிச்சார்.

                எங்க ஊரு பக்கம்லாம் உள்ளங்கை அரிச்சா பணம் வரும்னும், காக்கா கத்துனா வீட்டுக்கு விருந்தாளி வருவாங்கனும், வலது கண்ணு துடிச்சா கெட்டது நடக்கும்னு சொல்லுவாங்க... சுத்தம் சோறு போடும்னு சும்மாவா நம்ம முன்னோர்கள் சொன்னாங்க. எதுலயாது சாஞ்சு நின்னா அப்பிடி நிக்காதனு சொல்றது எதுக்கு? காலம்பூரா யாராயாது சார்ந்தே நிக்க வேண்டி வரும்ங்க்றதுக்காகத்தான். இந்த மாரியான விசயங்களுமே இந்த பட்டர்ஃப்ளை எஃபெக்ட்டோட தொடர்பு உடையதுதான். இத சிமிலாரிட்டி சைன்ஸ் கூட சொல்லுவாங்க சில பேரு

                ஒரு விசயத்துல நாம எப்பிடி நடந்துக்குவோம்ங்க்றத் சின்ன சின்ன விசயங்கள்ல நாம கண்டிப்பா  நம்மளையும் அறியாம வெளிப்படுத்துவோம். சின்னச் சின்ன செயல்கள் நம்மை சில சமயம் காட்டிக் குடுக்கும். இல்லைனா நாம யாருனு நிருபிக்கும்.  உதாரணத்துக்கு யேசுவோட வாழ்க்கைல இருந்தே சொல்லலாம்..யூதாஸ் யேசுவின் கைகள்ல முத்தமிட்டு அவர காட்டிக் குடுத்தான்.  இந்தச்  சின்ன காரியத்துனால எவ்வளவு பெரிய விளைவு நடந்த்துச்சுனு நமக்கு  நல்லாவே தெரியும்.
                 
                        நம்மகிட்ட இருக்கும் சின்னச் சின்ன அசைவுகள், பழக்கங்கள்னால நமக்கு நாமே நல்லது இல்லனா கெட்ட விளைவுகள ஏற்படுத்திக்குறோம். அதுனால தான் நம்மள பெத்தவங்க நமக்கு திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டே இருக்குறாங்க.. நாம கஸ்டப்படக்கூடாதுனு அவுங்களத் தவிர வேற யாரு நெனப்பாங்க..
                    இந்த மாரி எதிர் விளைவுகளை தவிர்க்கனும்னா நாம கொஞ்சம் நம்மள மாத்திக்கிட்டா போதும்.. சின்னச் சின்ன விசயங்கள கூர்ந்து கவனிக்கனும்.கொஞ்சம் விழிப்புணர்வோடு இருக்கனும். நிகழ்கால சிமிலாரிட்டிகள் தான் வருங்காலத்த காட்டுற கண்ணாடி. பெரிய பெரிய விசயங்கள தீர்மானிக்குற சின்னச் சின்ன விசயங்கள்ள  கவனமா இருந்தா போதும்...வெற்றி நம்மளத்  தேடி வரும். நாம வெற்றியடைவோமா இல்லயாங்கறத  இந்த சிமிலாரிட்டிகள வச்சே சொல்லிரலாம்.

                     சின்னச் சின்ன விசயங்கள் தான் பெரிய பெரிய விளைவுகள ஏற்படுத்தும்.. ஆபிரகாம் லிங்கன் ஒரு தடவ பிரச்சாரத்துக்கு போனப்ப ஒரு சிறுமி அவருக்கு , நீங்க தாடி வச்சா இன்னும் அழகா இருப்பீங்க... ஜனாதிபதியாகலாம்னு  ஒரு கடிதம் எழுதினா .. அவரும் அந்த சிறுமி  சொன்னத மதிச்சு தாடி வச்சாரு... ஜனாதிபதியானாரு. அவரு தாடி வச்சதுனால தான் அவரு தேர்தல்ல ஜெயிச்சாருனு அர்த்தம் இல்ல...தாடி அவர் தோற்றத்த கம்பீரமாக்குச்சு...மக்களுக்கும்  அவர் மேல நம்பிக்கை அதிகமாச்சு... அதுக்கு அவரது கம்பீரமான தோற்றம் தான் காரணம்...லிங்கன் இடத்துல நாம இருந்தா இப்பிடி ஒரு சிறுமியோட கருத்துக்கு மதிப்பு குடுப்போமா? யோசிப்போம்..

                     இந்த சிமிலாரிட்டி சைன்ஸ் தெரிஞ்சாப் போதும்... நம்ம வாழ்க்கைய சரி பண்ணிரலாம். நம்ம தோற்றத்துல நம்ம நடவடிக்கைல சின்னச் சின்னச் மாற்றங்கள் செய்யுறதுனால நமக்கு வெற்றி கெடைக்கும்னா அத ஏன் நாம செய்யக்கூடாது?  எப்பவும், எதுக்கெடுத்தாலும் பகுத்தறிவு பேசிக்கிட்டு, வீண் விவாதங்கள்ல வாழ்க்கைய கடத்திக்கிட்டு இருக்குறதுக்கு பதிலா ஒரு தடவ வாழ்ந்து தான் பாக்கலாமே...முயற்சி எடுத்து இத கத்துக்குவோம்.
நம்மளோட சிறு சிறு முயற்சிகள் கண்டிப்பா ஒரு நாள் நம்மள சிகரத்தோட உச்சிக்கே கொண்டு போகும்..\



ஞாயிறு, 21 அக்டோபர், 2018

மனம்...சொல்...செயல்...ஸ்மார்ட்வொர்க்...

ஸ்மார்ட்வொர்க்


                                இடியாப்பச் சிக்கல் மாதிரி உணர்வுச் சிக்கல்ல சிக்காத ஆளே இல்ல இந்த உலகத்துல.  அம்பியாவும், ரெமோவாவும் அந்நியனாவும் நமக்குள்ள ஏகப்பட்ட காட்சிகள்...விடாம ஓடிட்டே இருக்கு..நாமளும்  மாரி மாரி  அந்த அந்த கேரக்டருக்கு உயிர் குடுத்து குடுத்து, சீக்கிரமே டயர்டாகிற்றோம்.

                               உடம்ப விட மனசு சீக்கிரமே களச்சுப் போறதுனால, எதப் பாத்தாலும் எரிச்சல்..ஒரு வெறுமை...ஒருவித சலிப்பு...ஒரு மந்த தன்மை...நம்மள  தொரத்துது... இதுல இருந்தெல்லாம் விடுபடனும்னு தான் நாமளும் ஆசபடுறோம்...பட்.. ஆசபடுறதோடயே நிறுத்திக்குறோம்..... மாயமந்திரத்துல யாராது சரி பண்ணிக்  குடுத்தா நமக்கு சந்தோசம்...ஆனா, அதுக்கான   முயற்சிகளோ, செயல்களோ நாம செய்யமாட்டோம். அந்த அளவுக்கு சோம்பேறிகளாகிட்டோம் .
                               இதெல்லாம் பத்தாதுனு, கோவம், பொறாம, அழுகை, சோகம்,  அப்பிடியிப்பிடினு ஏகப்பட்ட எதிர்மறை உணர்வுகளின் குவியலா வேற இருக்கோம்..இவ்வளவு குப்பைகள வச்ச்சுக்கிட்டு நம்மளால எப்பிடி நம்ம வாழ்க்கைல ஜெயிக்க முடியும்?
                              ஸ்மார்ட் வொர்க் பண்ணனும்னு நினைக்குறோம். நம்மளோட மனக்குப்பைகளை தூக்கியெறியுறதும் ஒரு ஸ்மார்ட் வொர்க் தான்னு புரியாம, பாரங்களைத் தூக்கிக்கிட்டே மலையேறுறோம். அதுனால தான் சீக்கிரமாவே களச்சும் போய்றோம்.
                               எதிர்மறை உணர்வுச் சிக்கல்ல இருந்து வெளியே வர்றதுக்கு நிறைய வழிகள்  இருக்கு....அதுல ஒரு வழியை இப்ப பாக்கலாம்..நம்ம மனசுல தோணுற எல்லாத்தையும் ஒரு காகிதத்துல  எழுதிறனும். உணர்வுகள பேப்பர்ல எழுத எழுத, நம்ம மனநிலைல கொஞ்ச கொஞ்சமா மாற்றங்கள் வர ஆரமிச்சுரும்...கடைசில எதிர்மறை எண்ணங்கள் ,கட்டெறும்பான கழுதை மாரி , இருக்குற இடம் தெரியாம காணாமாப் போயிரும்.
                             பொதுவா நம்ம  மனசுல வர்ற எண்ணங்கள், இந்த வழியா  வந்துட்டு அந்த வழியா உடனே போயிரும். ஆனா, நாம தான் அத போகவிடாம,  விடாப்பிடியா பிடிச்சு தொங்கிக்கிட்டு இருப்போம். கடந்து போற இரயிலுக்கு டாட்டா காட்ற மாதிரி, எண்ணங்களையும், கடந்து போகவிட்டுட்டா , எந்த உணர்வுகளுமே  நம்மள பெருசா பாதிக்காது..அடுத்து என்னனு சிந்திக்க மனசு தயாராகிரும். எண்ணங்கள்  பின்னாடி போறதுனால தான் நம்ம மனசு எப்பப் பாத்தாலும் தம் பிரியாணி மாரி சூடாவே இருக்கு...
                             அடுத்து  சுயப்பேச்சு....  இந்த முறையிலயும் , நம்ம மனசுக்கு கடிவாளம் போடலாம்..அது எப்படினா , எப்பலாம் நமக்கு மனசோர்வு வருதோ ....எப்பலாம் எதிர்மறையா இருக்குறோமோ... எப்பலாம் சாஞ்சுக்க தோள் தேடுறோமோ... அப்பலாம் நம்மள நாமளே தட்டிக்குடுக்குற மாரி நமக்குள்ள பேசுனாப் போதும்.. நான் கண்டிப்பா ஜெயிப்பேன்...என்னால் முடியும்...என் வாழ்க்கைய நான்  உருவாக்குறேன்...என்னால எளிதா பணம் சம்பாதிக்கமுடியும். என் வாழ்க்கை  என் உரிமைனு நமக்கு நாமே உற்சாகமா பேசிக்கிட்டு இருந்தா போதும்...நம்ம வார்த்தைகள மனசு நம்ப ஆரமிச்சுரும்..பிறகு தான் நம்புறத அப்பிடியே உருவாக்கத் தொடங்கிரும்.. இந்த ஸ்மார்ட் வொர்க் நம்ம வேலைய பாதியா கொறச்சுரும்.
                 நம்ம மனம் சொல் செயல் மூன்றும் ஒரு நேர்க்கோட்டுல வந்துட்டா  வானத்த கூட விலை பேசலாம். சின்னச் சின்ன ஸ்டெப்ஸ் தான் நம்மள  மலை உச்சிக்கு கூட்டிக்கிட்டு போகும்..  சின்னச் சின்ன செயல்கள்  செய்யுறப்ப நமக்கு சலிப்பு வராது,,,மலைப்பு தோணாது..அதுக்கு பதிலா, மனசு மகிழ்ச்சியடையும்..சின்னச் சின்ன வெற்றிகள் நமக்கு  உற்சாகம் தரும்.. நம்மாளயும் முடியும்ங்ற நேர்மறை எண்ணம் நம்மள எப்பவும் புத்துணர்ச்சியோடயே வச்சிருக்கும்...இந்த மனநிலை நமக்கு வெற்றியை எளிதாக்கிரும். அதுனால சின்னச் சின்ன செயல்களை இன்னைக்கே செய்யத் தொடங்குவோம்...அர்த்தமுள்ள வாழ்வு வாழ்வோம்...

புது வருடம்...புது வசந்தம்...புது சபதங்கள்.

                புது வருசம்னாலே  நிறைய தீர்மானங்கள் எடுத்துக்கனும்ங்ற சம்பிரதாயத்த யாரு உருவாக்குனதுனு தெரில..வருசாவருசம் புதுப்புது தீர்மா...