வெள்ளி, 27 ஜூலை, 2018

சமூகவலைதளங்களின் சாபங்கள்

இணையம்


international network  என்பதன் சுருக்கமே internet.  அதாவது பல கணினிகளை ஒரு மையக் கணினியோடு இணைத்து செயல்படுத்துதல். தமிழில் சொல்வதென்றால் இணையம். 1990களில் பரவலாக பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த இணையம், முதலில அமெரிக்க இராணுவத்துறையில் தகவல் பரிமாற்றத்திற்க்காகப்  பயன்படுத்தப்பட்டது.  அமெரிக்காவின் நான்கு மாநிலங்களில்  செயல்பட்டு வந்த கணினிப் பிணையங்களை  இணைத்து ஆர்ப்பா நெட் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.  இப்போது செயல்பாட்டில் உள்ள இணையத்தின் முன்னோடி  இந்த அமைப்பே ஆகும். ஆர்ப்பாநெட்டில் சேமித்து  வைத்துள்ள தகவல்களை அமெரிக்காவின் எந்த மூலையிலிருந்தும்  கணினித் தொடர்பு மூலம் பெறமுடியும் என்று நிருபிக்கப்பட்டது. பிறகு மெல்ல மெல்ல  அரசின் மற்ற துறைகள், பல்கலைகழகங்கள், ஆராய்ச்சிக்கூடங்கள் இந்த ஆர்ப்பாநெட்டோடு இணைக்கப்பட்டது.  1990ல் ஆர்ப்பாநெட் மறைந்து என் எஸ் எஃப்நெட்டுடன் எல்லாக் கணினி பிணையங்களூம் இணைக்கப்பட்டன . அரசும் அரசுத்துறை நிறுவனங்களும் ஆராய்ச்சிக்கூடங்களும் தம் சொந்த பயன்பாட்டிற்க்காகப் பயன்படுத்தி வந்த பிணையத்தை வருங்காலங்களில் பொதுமக்களும் பயன்படுத்திட இந்த என் எஸ் எஃப் வழிவகுத்தது.

இணைய வளர்ச்சியின் வீழ்ச்சி

இதற்க்குப்  பிறகு இணையத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் நிகழ்ந்தது. பட்டி தொட்டிகளிளெல்லாம் பரவ ஆரம்பித்தது.  படிக்காதவர்கள் கூட இன்று மிக எளிதாக இணையத்தை பயன்படுத்தமுடிகிறது.  அதற்க்கு முக்கியமான காரணம்  அலைபேசிக் கருவித் துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய வளர்ச்சியே.
ஒருபக்கம் இணைய வளர்ச்சி அபரிதமாக இருந்தாலும் மறுபக்கம் நாம் இழந்து கொண்டிருப்பவைகளும் அதிகமாகிக் கொண்டே இருப்பது வருத்தத்திற்க்குரியதே. சுயகட்டுப்பாடு, சுய ஒழுக்கம், உடனிருப்பவர்களோடு சுக துக்கங்கள் பகிர்தல்,  ஊர் சுற்றுதல், மகிழ்ச்சியாக இருத்தல் , உலகை உணர்தல், குடும்பத்தோடு கூடி இருத்தல், ஓடியாடி விளையாடுதல், நூல் வாசித்தல், ஒருவர்க்கொருவர்  கலந்தாலோசித்தல் , உதவி செய்தல் என்ற இழப்புகளின் பட்டியல் சொல்லிக்கொண்டே போகலாம்.

                   உடனிருக்கும்  மனிதர்களின் உணர்வுகள் கண்டுகொள்ளப்படாமலேயே போவதால்  மனிதர்களுக்கிடையே விலகி இருக்கும் மனப்பான்மை பெருகிக்கொண்டே போகிறது. பொறுமையற்ற நிலை, தான் தனது என்ற மனநிலை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது.  அலைபேசியும் இணையமும் இருந்தால் போதும்..உலகமே நம் கையில் என்று பெருமிதம்  கொள்ளும் நாம்,  நம்மோடு இருக்கும் சகமனிதர்களைப்  பொருட்படுத்துவதேயில்லை. மனிதர்களிடமிருந்து விலகி, கருவிகளுக்கு அடிமையாகிக் கொண்டே இருக்கிறோம். குறிப்பாக,
சமூக வலைதளங்களின் அபார வளர்ச்சி நம்மை முழுதும் அடிமைப்படுத்திவிட்டது என்றே சொல்லவேண்டும். ட்விட்டர், வாட்ஸப், ஃபேஸ்புக்  ,ஸ்கைப் ,டின்டர் போன்று நூற்றுக்கணக்கான சமூகவலைதளங்கள் ஒரு மனிதனை எவ்வளவு கெடுக்கமுடியுமோ அவ்வளவு  கெடுத்துக் கொண்டிருக்கின்றன. மனிதனின் சிந்திக்கும் தன்மையை முற்றிலும் செயலிழக்கச் செய்கின்றன  இந்த சமூக வலைதளங்கள்.
         தகவல் பரிமாற்றம் எளிதாக இருப்பதால், எதைப் பகிரலாம், எதைப் பகிரக்கூடாது என்ற உணர்வின்றி ,செய்திகளையும் வீடியோக்களையும் முதலில் பரிமாறிட வேண்டும் என்ற உந்துதலில், சற்றும் சிந்திக்காது செயல்படும் அளவிற்கு  மனிதனின் மூளை மழுங்கடிக்கப்பட்டுவிட்டது ..
அறிவை இழந்து கொண்டிருக்கிறோம்  என்ற விழிப்புணர்வு கூட  நம்மிடம் இல்லை. தகவல்கள்  பரிமாறுவதில் முதலில் இருக்கவே விரும்பும் நாம் , வாழ்க்கையில் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்க மறந்துவிட்டோம். எதையும் முதலில் நாமே பகிரவேண்டும் என்ற உந்துதலில்  தகவலறிவு கொண்டே  எல்லாவற்றையும் பார்க்கிறோம். நம் கண் முன்னே  இருக்கும் இயல்பு வாழ்க்கையைவிட  சமூகவலைதளங்களில் இருக்கும் மாய வாழ்க்கையை நோக்கி ஈர்க்கப்படுகிறோம்.அதன் விளைவு யதார்த்த வாழ்க்கை நம்மை ஒதுக்கி வைக்கும் போதே உணர்கிறோம்.அதற்க்குப்பின் அழுது புலம்பி என்ன பயன்?
         குறுஞ்செய்திகளையும்,   அவசர செய்திகளையும், ஆரோக்கிய செய்திகளையும் உடனுக்குடன்  மற்றவர்களூக்கு அனுப்பி எதிலும் நாமே முதலில்  உலகிற்கு காட்டிக்கொள்ள விரும்பும் நாம் , அந்த செய்திகள் பற்றிய நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை .நம்மை பொறுத்தவரை வந்த செய்திகளை உடனே பரப்பிவிட வேண்டும். அவ்வளவே. அதனால் ஏற்படப்போகும் நல்லது கெட்டது குறித்து நாம் சிறிதும் கவலைப்படுவதில்லை. அதற்க்கு நமக்கு நேரமும் இல்லை. விருப்பமும் இல்லை..படித்தவர்கள் தான் இப்படி என்று எண்ணிவிட வேண்டாம்.
       
              படித்த,நகர்ப்புற மக்களுக்கு  எந்தவிதத்திலும்  தாங்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்களில்லை என்று கிராமப்புறங்களிலும் மக்கள் சமூக வலைதளங்களுக்கு அடிமையாக இருக்கின்றனர்.   ஆபாச வலைதளங்களுக்கு இளைஞர்கள் மட்டுமன்றி, சிறார்களும் பெரியவர்களும்  அடிமை சாசனமே எழுதிக்கொடுத்திருக்கிறார்கள். இதனால் தங்கள் வாழ்வு அதலபாதாளத்திற்குப்  போவதை உணராமலேயே  வாழ்கிறார்கள்.
           சமூக வலைதளங்கள் நம்  சமூக அக்கறையை முற்றிலும்  சிதைத்து,எல்லாவற்றையும் விளம்பர நோக்கோடு பார்க்க வைத்துவிட்டது. நமது தற்பெருமையை வளர்த்துவிடுகிறது.. நான் என்ற உணர்வை அதிகரிக்கச் செய்கிறது.. சுய விளம்பரம் தேடியலையச் செய்கிறது.. பெருமை பீற்றீக் கொள்ளச் செய்கிறது.. இது எதையும் அறியாது நாமும் அதன் பின்னால் கண் மூடித்தனமாகப்  போய்கொண்டிருக்கிறோம்.
          டெக்னாலஜி வளர்ச்சியை நம்மால் தடுக்க முடியாது... அதற்காகக்  கண் மூடித்தனமாக பின் தொடரவும் கூடாது.. நமக்கு எது தேவை , எது தேவையில்லை என்று  பிரித்தறியும் அறிவோடு, தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால் நன்மையே விளையும் ..

          நமக்குப் பின் வரும் சந்ததிக்கு  நாம் நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகும். எனவே தேவைக்கு மட்டும் இணையத்தை பயன்படுத்தி பழகுவோம்.. நல்ல சந்ததி உருவாக்குவோம்..

 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புது வருடம்...புது வசந்தம்...புது சபதங்கள்.

                புது வருசம்னாலே  நிறைய தீர்மானங்கள் எடுத்துக்கனும்ங்ற சம்பிரதாயத்த யாரு உருவாக்குனதுனு தெரில..வருசாவருசம் புதுப்புது தீர்மா...