புதன், 15 ஆகஸ்ட், 2018

மண்ணின் மறைக்கப்பட்ட வீரங்கள்

                    சுதந்திர இந்தியா தனது எழுவத்தியிரண்டாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடி முடித்திருக்கிறது நேற்று. அடிமை இந்தியாவில், சுதந்திரம் என்பது ஒரு கனவாக இருந்த காலம் ஒன்று இருந்தது. இன்று நாம் சுதந்திரமாக ,இருப்பதற்க்காக அன்று உயிர்த் தியாகம் செய்தவர்கள் எண்ணிக்கை மிக மிக அதிகம்.அவர்களை நினைத்து நன்றி சொல்ல வேண்டிய நாள் இது.

                சுதந்திரப் போராட்டம் என்ற ஒரு நீண்ட காலத்தை எடுத்துக் கொண்டு பார்த்தால் ,அதன் முற்பகுதி கிட்டத்தட்ட மறைக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது.  விடுதலைப் போராட்டம்னாலே ஜான்சி ராணி, பகத்சிங், மங்கள் பாண்டே, காந்தி போன்றவர்கள் நினைவுக்கு வருகிற அளவுக்கு வேலு நாச்சியாரோ, கட்டபொம்மனோ  ,மருது பாண்டியர்களோ,திப்பு சுல்தானோ நம்  நினைவுக்கு வருவதில்லை. அன்றைய தென்னிந்தியப் பகுதிகளில் , ஜான்சியின்  ராணி லட்சுமி பாயின் காலத்துக்கு முன் ,அதாவது கிட்டத்தட்ட 1700 களிலேயே கும்பினிக்காரர்களை எதிர்த்து, ஆங்காங்கே குறுநில மன்னர்களும் பெரிய பெரிய நிலக்கிழார்களும் போராடிக்கொண்டே தான் இருந்திருக்கிறார்கள் . பாளையக்காரர்களின் எழுச்சி, வேலூர்ப்புரட்சி, வீரன் வேலுத்தம்பி, மருது சகோதரர்கள், வேலுநாச்சியார்,  திப்புசுல்தான், பழசி ராஜா போன்றோர் வரலாறு, எளிதில், மறக்கவோ அல்லது மறைக்கவோ பட்டது நமது துரதிர்ஷ்ட்டமே.

                  தங்களை அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையனை வெளியேறச் சொல்லி  எழுந்த மக்கள் புரட்சிக்கு முன்னாலேயே , கும்பினிக்காரர்களிடமிருந்து தங்கள்  ராஜ்ஜியத்தை காப்பாற்றிக் கொள்ள குறுநில மன்னர்கள் பலர் தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள்.  தற்போது கேரளாவில் உள்ள வயநாட்டுப்  பகுதிகளை  1700களில் ஆண்டு வந்த பழசிராஜா, தன் மக்களின் உரிமைக்காக குரல் எழுப்பினார். தங்கள் மண்ணின் மீதோ,அதில் விளையும் பொருள்களின் மீதோ, அதன் வருவாயின் மீதோ வியாபாரத்திற்க்கு வந்தவர்களுக்கு உரிமையேதும் இல்லை என்று கூறி கப்பம் கட்ட மறுத்தவர் பழசிராஜா. சுதந்திரப்போருக்கான முதல் விதையை போட்டவர் இவரே.

                  கேரளாப் பகுதியில் விளையும் மிளகு, அப்பகுதியின் செழுமை கும்பினிக்காரர்களின் பார்வையில் பட்டதும்,  அப்பகுதியையும் தமது ஆளுகைக்குள் கொண்டு வந்த ஆங்கிலேயர்கள், அப்பகுதியைச் சேர்ந்த நிலக்கிழார்களையும், குறுநில மன்னர்களையும் தங்களுக்குக் கப்பம் கட்டச் சொல்லி  பணிக்கையில்,  பலரும் பயந்து கப்பம் கட்டிய போது, தனிஒருவனாக மறுத்தார் பழசிராஜா. இவரது மாமாவின் உதவியோடு ஆங்கிலேயப் படை ஒன்று பழசிராஜாவை  கைது செய்ய
அரண்மனைக்கு  வருவதற்க்கு முன் காட்டுக்குள் தப்பிசென்ற பழசி ராஜா அங்குள்ள பழங்குடிகள் மற்றும் சில நிலக்கிழார்களின் உதவியோடு ஒரு கொரில்லாப் படையை உருவாக்கினார்.  இப்படையின் கொரில்லாத் தாக்குதலை சமாளிக்க முடியாத பிரிட்டிஷ் அரசு சமாதானத்திற்க்கு அழைத்து ஒப்பந்தம் ஒன்று போட்டது.. ஆனால் ஒப்பந்தப்படி அவர்கள் நடக்காததால், மீண்டும் போர் வந்தது, இம்முறை இரு பக்கமும் அதிகமான சேதம் ஏற்பட்டது. கடுமையான சண்டைக்குப் பின்னர்  ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் பழசிராஜா. அவர் திட்டமிட்டபடி குறுநில மன்னர்களின் ஆதரவும், சிவகங்கையின் படையும் அவர்க்குக் கிடைத்து இருந்தால் ஒருவேளை ஆங்கிலேய எதிர்ப்புப் போராட்டம் அன்றிலிருந்தே தொடங்கியிருந்திருக்குமோ  என்னவோ..



                        வரலாற்றில் பதிவு செய்யப்படாத மற்றொரு புரட்சி வேலூர் புரட்சியாகும். இது கிட்டத்தட்ட சிப்பாய் கலகத்திற்க்குச் சமமான  ஒரு புரட்சி இது.   வேலூர் கோட்டையில் திப்பு சுல்தானின் வாரிசுகளும், உறவினர்களூம் சிறை வைக்கப்பட்டு இருந்தனர். திப்புவின் வாரிசுகளை மைசூரின் அரியணையில் அமர வைக்க விரும்பிய அவரது விசுவாசிகள் கிராமம் கிராமமாகச் சென்று மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டினர்.
அப்பொழுது ஆங்கிலேயத் தளபதி, வீரர்களுக்கு ஒரு தொப்பியை அறிமுகப்படுத்தினான். அதை, மாட்டுத் தோலால் செய்யப்பட்டு, மாட்டுக் கொழுப்பு பூசப்பட்டது என்று இந்துக்களும், பன்றியின்  தோலால் செய்யப்பட்டது என்று முகமதிய வீரர்களூம் அதனை பயன்படுத்த மறுத்தனர்.மேலும் ஆங்கிலேயர்களின் சில நிபந்தனைகள் வீரர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கிறிஸ்துவ மதத்திற்க்கு மாற்றவே இந்த ஏற்ப்பாடு என்று வீரர்கள் கருதினர். திப்புவின் நண்பர்களும் உறவினர்களும் புரட்சிக்கு ஏற்பாடு செய்ததில் 1806 ஆம் ஆண்டு ஒரு நள்ளிரவில் புரட்சி வெடித்தது. இந்திய சிப்பாய்கள் ஷேக் சுபேதார் காதம்,ஷேக் சுபேதார் ஹூசைன், ஷேக்  காசிம் போன்றோரின் தலைமையில் போராட்டக்காரர்கள் ஆங்கிலேய அதிகாரிகளைக் கொன்று குவித்தனர். முடிவில் கோட்டை  கைப்பற்றப்பட்டு திப்புவின் புலிக்கொடி ஏற்றப்பட்டது. கோட்டை கைப்பற்றப்பட்டாலும், கஜானாவைக் புரட்சியாளர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மேலும் மேலும் ஆங்கிலேயப் படை வந்து குவிந்து விட்டது. கோட்டையைக்  கைப்பற்றிய ஆங்கிலேயப்படை புரட்சியாளர்களைக் கொன்று குவித்தது.அன்று ஒரு நாளில் மட்டும் கொன்று குவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூவாயிரத்திற்க்கும் மேல் .  இப்புரட்சி நடந்து முடிந்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், கிட்டத்தட்ட இதே காரணங்களுக்காக சிப்பாய் கலகம் வட இந்தியாவில் மூண்டது. இரண்டு புரட்சிகளுக்கும் அடிப்படைக் காரணம் ஒன்றாக இருந்தாலும் வரலாற்றில் ஏனோ வேலூர்  புரட்சி மூடி மறைக்கப்பட்டுவிட்டது.
வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த வேலு நாச்சியாரின் பெருமைகள் அளவிடற்க்கரியது.இராமநாதபுரத்தில் சேதுபதி வம்சத்தில் பிறந்த வேலுநாச்சியார், சிறு வயதிலேயே பத்து மொழிகளை மிகச் சரளமாக பேசுவதில் வல்லவர். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல் சிறு வயதிலேயே போர்க்கலைகளைத்  திறம்படக் கற்றவர் .வாள்சண்டை,வில் வித்தை, யானையேற்றம்,குதிரையேற்றம் போன்றவற்றில் வல்லவர். பயம் என்பதை அறியாதவர். வீரம் ஒன்றையே உயிராகக்  கொண்டவர். ஆறடி உயரம் கொண்ட இவரது அழகையும், வீரத்தையும் கண்ட சிவகங்கை இளவரசர்  முத்துவடுகநாதர், இவர் மீது காதல் கொண்டு, மணம் புரிந்தார்.
                   சீரும் சிறப்புமாக செழிப்பாக இருந்த சிவகங்கைச் சீமையை கைப்பற்ற நினைத்த ஆற்காட்டு நவாப்புக்கு ஆங்கிலேயர்கள் படை உதவி செய்தனர். காளையார் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் மீது நவாப் தாக்குதல் நடத்தியதில் மன்னர் இறந்தார்.  இறந்த கணவனைக் காண வந்த ராணியையும் வழியிலேயே மடக்கினர்.  ராணியும் வீரத்தோடு போரிட்டு,அவர்களை ஓட ஓட விரட்டினார். கணவரின் உடலைப் பார்க்கத் துடித்த ராணிக்கு அவருடைய படைத் தளபதிகள் மருது பாண்டியர்கள்  வேறு ஆலோசனை வழங்கினர். நாடும் பறி போய்விட்டது. மன்னரும் இறந்துவிட்டார்.  இந்நிலையில் மன்னரைக் காணச் சென்று சிக்கலில் மாட்டிக்கொண்டால்,நவாப்பை பழி வாங்க முடியாது மற்றும் நாட்டை மீண்டும் கைப்பற்ற முடியாது. அதனால் போகவேண்டாம் என்று கூறித் தடுத்தனர். ஆனால், ராணியோ கணவரைக் காண்பதில் உறுதியாக இருந்தார். காளையார் கோயிலில் பிணக்குவியல்களுக்கிடையில் இருந்த மன்னர் மற்றும் இளவரசியின் உடலைப் பார்த்து கதறித் துடித்த ராணி ,நவாப்பை பழிக்குப்பழி வாங்க உறுதிபூண்டார்.
மருது பாண்டியர்களின் உதவியோடு தப்பிச் சென்ற அவர் , நவாப்பின் பரம எதிரி ஹைதர் அலியின் உதவியை நாடத்  தீர்மானித்தார் திண்டுக்கல்லிலிருந்த ஹைதர் அலியைக் காண மாறுவேடத்தில் சென்ற அவரிடம் ஹைதர் , வேலு நாச்சியார் வரவில்லையா என்று கேட்டார். வேடம் கலைத்த ராணி அவரிடம் உருது மொழியில் சரளமாக தன்னுடைய லட்சியத்தையும்,தான் அடைந்த வேதனைகளையும் கூறி உதவி கேட்டார். ஹைதரும் படை உதவி செய்ய சம்மதித்தார். மேலும் தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதியும் வழங்கினார்.
பாதுகாப்பான அந்த கோட்டையிலிருந்து கொண்டே ராணி படைகளைப் பெருக்கினார் .அவருடைய ஒரே லட்சியம் நாட்டைமீண்டும் கைப்பற்றி அனுமன் கொடியை பறக்க விட வேண்டும் .. நவாப்பை பழிவாங்க வேண்டும் என்பதே. அவருடைய லட்சியம் நிறைவேறும் அந்த நாளும் வந்தது. முதலில் வேலு நாச்சியார் காளையார் கோயிலைக் கைப்பற்றினார்.திருப்பத்தூரிலும் சிவகங்கைச் சீமையிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலேயப் படைகளும் குவிந்திருந்திருந்ததால் வேலு நாச்சியார்  தன் படையை இரண்டாகப் பிரித்து,  சின்ன மருது தலைமையில் ஒரு படையை திருப்பத்தூருக்கு அனுப்பினார். பெரியமருதுவோடு சேர்ந்து சிவகங்கைச் சீமையை  நோக்கிச் சென்றார். திருப்பத்தூரை சின்ன மருதுவின் படை வென்றது. விஜயதசமியன்று சிவகங்கை  அரண்மனைக்குள்ளிருக்கும்  ராஜராஜேஸ்வரி தெய்வத்தை பெண்கள் கூட்டம் கூட்டமாகச்  சென்று வழிபடுவது வழக்கம் .அப்பெண்களோடு பெண்களாக வேலுநாச்சியாரும் அவருடைய பெண்கள்  படையும் ஆடைக்குள் ஆயுதத்தை மறைத்துக் கொண்டு  உள்ளே நுழைந்து தாக்கினர்.  இதனை எதிர் பார்க்காத ஆங்கிலேயப் படை சிதறி ஓடியது .கோட்டையிலிருந்த ஆங்கிலேயக் கொடி அகற்றப்பட்டு வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவருடைய ஏழு ஆண்டு காலத் தவம் அன்று நிறைவேறியது.  இந்த மாபெரும் வெற்றியை அவர் அடைந்தபோது அவருடைய வயது ஐம்பது. ஆங்கிலேய அரசை எதிர்த்து வெற்றிவாகை சூடிய ஒரே அரசி  இவர் தான்.  மருது பாண்டியர்களின் கொரில்லாத் தாக்குதல், வேலுநாச்சியாரின் பெண்கள் படையின் உக்கிரம் மற்றும் பெண்கள் படை வீராங்கனை குயிலி ,தன் உடலில் தீ வைத்துக் கொண்டு ,ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கைத்  தகர்த்தது  போன்றவைகளுக்கு முன்னால் ஆங்கிலேயர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பதே உண்மை. இவரது வீரத்திற்க்கு முன் ஆங்கிலப்படை தலை வணங்குவதைத் தவிர வேறு வழி அவர்களுக்கு இல்லை என்பதே உண்மை.
                       இது போன்று எண்ணிலடங்கா நிகழ்வுகள் இந்தியா முழுவதும்  பரவியிருக்கின்றன. இவர்கள்  போட்ட விதையே  பின்னாளில் சுதந்திரத்திற்க்காகப்  போராடியவர்களுக்கு ஒரு உத்வேகத்தை  கொடுத்திருக்கும். நாம் சுவாசிக்க,  சுதந்திரக் காற்றைத்  தந்த நமது மண்ணின் மைந்தர்களின் வீரமும் தியாகமும் நம் மனதில் என்றும் உயிரோடு இருக்கவேண்டும். அப்போது தான் பெற்ற  சுதந்திரத்தை நம்மால்  பேணி காக்க முடியும்...அதுவே நாம் அவர்களுக்குச் செய்யும்  மிகப் பெரிய நன்றிக்கடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புது வருடம்...புது வசந்தம்...புது சபதங்கள்.

                புது வருசம்னாலே  நிறைய தீர்மானங்கள் எடுத்துக்கனும்ங்ற சம்பிரதாயத்த யாரு உருவாக்குனதுனு தெரில..வருசாவருசம் புதுப்புது தீர்மா...