முதலீடு
முதலீடு என்ற உடனே நமக்கு பொதுவா என்ன ஞாபகத்துக்கு வரும்? வங்கியில நாம போடுற முதலீடு தான் நம்ம ஞாபகத்துக்கு வரும் இல்லயா.. ஆனா, நான் இங்க சொல்ல போறது பணத்த முதலீடு செய்றத பத்தி இல்ல. அன்பை முதலீடு செய்றதபத்தி. புதுசா இருக்குல.. அன்பை முதலீடு பண்ணா ... என்ன பண்ணலனா என்ன.. அது ஒரு விசயமானு தோணுதுல. அப்படித்தான் தோணும்..
அன்பை எப்பிடி முதலீடு செய்றது? அதுக்குனு வங்கி இருக்கானு எத்தன பேரு சிந்திச்சீங்க? அன்பை முதலீடு செய்யத் தேவையானது ஒன்றே ஒன்று தான். அன்பு கொண்ட மனம். நமக்கு பிரியமானவர்களிடம் அன்பை முதலீடு செய்ய வேண்டும்.
உறவுகளை வளர்க்கத் தேவையான அன்பை முதலீடு செய்து கொண்டே இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அந்த உறவில் ஏற்படும் களைகளை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளமுடியும். உதாசீனப்படுத்தப்படும் உறவுகளில், எதிர்பார்ப்புகள் ,அந்த உறவையே அசைத்துவிடும். சரியாக வளர்ச்சியடையாத பயிர்போன்ற அந்த உறவுகளில் நம் எதிர்பார்ப்புகளை அதிகரித்துக் கொள்ளும் போது தான் நம் வாழ்வில் துன்பங்கள் வருகிறது.
எப்படி வங்கியில் தொடர்ந்து போடப்படும் தொகையால் நமது இருப்புநிலை கூடிக்கொண்டே இருக்கிறதோ, அது போல் நம் உறவுகளிலும் அன்பை தொடந்து முதலீடு செய்து கொண்டே வரும்போது உணர்வுரீதியிலான இருப்பும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். நம் வாழ்விலும் வசந்தம் தொடர்ந்து வீசும்.
ஆனால், இதற்கு மாறாக நடப்பதே நம் இயல்பாகிவிட்டது. உறவுகளை சரிவர பாதுகாக்காமலேயே அது நிலைத்து நிற்கும் என்று நாமாகவே முடிவு செய்து கொள்கிறோம். இதற்கு சரியான எடுத்துக்காட்டு திருமணபந்தத்தின் மூலம் வரும் உறவு.
ஆயிரம் காலத்துப்பயிர் என்று நாம் போற்றும் இந்த உறவுநிலையில் நம்மோடு இணையும் அந்த உறவை நாம் சரிவர பேணிகாக்கிறோமோ என்று நம்மை நாமே ஒருமுறை இந்தத் தருணத்தில் திரும்பிப் பார்த்துக்கொள்வோம் .நாம் இந்த உறவை மிக எளிதாக எடுத்துக்கொள்கிறோம். அசாத்திய நம்பிக்கை நம்மைவிட்டுப்போகாது என்று இந்த உறவை வளர்க்க பெரும்பாலானோர் முயல்வதேயில்லை. அதே நேரம் எடுத்துக்கொள்ள மட்டும் விரும்புகிறோம்.
எந்தவித முதலீடோ சேமிப்போ இல்லாமல் வங்கியிலிருந்து எப்படி எடுக்கமுடியும்? முடியாதுல. பயிர் வளரத் தேவையான உரம் போடாம விளைச்சல் கிடைக்குமா? கிடைக்காதுல... அதனால் நம் வாழ்க்கைல நாம் சந்தோசமா இருக்கனும்னா, நிம்மதியா குழந்தை குட்டிகளோட இன்பமா பொழுது போக்கனும்னா அன்பை மறக்காம விதைக்கனும்.
உணர்வுகள் இருப்பில் இல்லனா, எதுக்கு எடுத்தாலும் சண்ட சச்சரவு தான். ஒவ்வொரு வார்த்தைகளும் புதுவடிவம் எடுத்து ,நம்மை தாக்கிக்கொண்டே இருக்கும். பூதக்கண்ணாடி கொண்டு நாம் எடை போடப்படுவோம். நம்ம சொற்களே நமக்கு எமனா வந்து நிற்க்கும்., நாம் சொல்ல வருவது என்ன என்ற நோக்கங்கள் அடிபட்டு, வார்த்தைகள் உயிர்ப்பெற்று யுத்தமிடத் தொடங்கும். கண்ணி வெடிகளுக்குள் புதைக்கப்பட்ட நிலம் போல் நம் வாழ்வு ஆகிவிடும்
.
இவையெல்லாவற்றிற்க்கும் ஒரே தீர்வு அன்பை முதலீடு செய்வதுதான். எப்படி முதலீடு செய்வது என்ற கேள்வி நமக்குள் வருகிறதல்லவா? மிகவும் எளிதே அதுவும் . நம் குடும்பத்தோடும், நம் பிரியமானவர்களோடும், அன்றாடம் நம் நேரத்தை செலவிட்டால் போதும். ஒன்றாக நேரத்தை செலவிடுதல் என்பது ஒன்றாக அமர்ந்து, மொபைல் போன் அல்லது லேப்டாப் அல்லது டேப்லட் என்று இருப்பது இல்லை. ஒருவருக்கொருவர் சிரித்துப் பேசி,கலந்தாலோசித்து,அன்றைய நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் தரமான நேரமாக அது இருக்க வேண்டும்.
இதனால் என்ன நடந்துவிடும் என்று கேட்பவர்கள்,ஒருமுறை இதை செய்து பார்த்தால் போதும் நீங்களே புரிந்து கொள்வீர்கள். மனங்களிடையே இருக்கும் இடைவெளிகள் குறைந்து, மனங்கள் மலரத் தொடங்கும் .நம் வாழ்க்கையில் மகிழ்ச்சி,ஆனந்தம், நிம்மதி என்று அளவில்லா நன்மைகள் தேடி வருவதை நம்மால் உணர முடியும்.
எவ்வளவுக்கு எவ்வளவு அன்பை முதலாகக் கொண்டு செயல்படுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு வாழ்தல் அர்த்தப்படும். அன்பைக் கொடுத்தல் மட்டுமல்ல பெறுதலும் வரமே.. பெறுதலின் மூலம் கொடுப்பவர்க்கு மதிப்பு, மரியாதை கிடைக்கிறது. எனவே பெற்றுக்கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும். இதுவும் கூட ஒரு சிறந்த முதலீடுதான்.
அன்புடையர் என்பும் உரியர் பிறர்க்கு என்ற வள்ளுவன் மொழி உலகறிந்ததே. வள்ளுவன் பிறந்த நாட்டில் பிறந்த நாமும் அன்பை பரப்புவோம். வளமோடு வாழ்வோம்.
வாழ்க வளமுடன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக